ஐ.பி.எல். தொடரிலிருந்து ஓய்வா..? மவுனம் கலைத்த மகேந்திரசிங் தோனி

2 days ago 3

சென்னை,

18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி வெறும் ஒரு வெற்றி மட்டுமே கண்டு புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இதனால் சென்னை அணியை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

குறிப்பாக சென்னை அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய விக்கெட் கீப்பருமான மகேந்திரசிங் தோனி, ஐ.பி.எல். தொடரிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். 43 வயதான அவர், பேட்டிங்கில் இறுதி கட்டத்தில் இறங்கி அணிக்கு தோல்வியை கொடுத்து வருவதாக ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். எனவே அவர் ஓய்வு பெற்று இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இருப்பினும் ரன் குவிக்கவில்லை என்றாலும் அவரது அனுபவம் மற்றும் விக்கெட் கீப்பிங் திறன் அணிக்கு மிகுந்த மதிப்பானது என்று சில முன்னாள் வீரர்கள் தோனிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதனிடையே சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான ஆட்டத்தை தோனியின் தந்தை பான் சிங், தாயார் தேவகி தேவி, மனைவி சாக்ஷி, அவரது மகள் ஷிவா ஆகியோர் நேரில் பார்த்து ரசித்தனர். தோனியின் குடும்பத்தினர் சேப்பாக்கத்துக்கு வந்திருந்ததால், ஒருவேளை இதுவே அவரது கடைசி ஆட்டமாக இருக்கலாம் என்றும் அவர் உடனடியாக ஓய்வு பெறக்கூடும் என்றும் சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. ஆனால் ஓய்வு குறித்து 43 வயதான தோனி எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்நிலையில் தனது ஓய்வு முடிவு குறித்து மவுனம் கலைத்துள்ள தோனி சில விஷயங்களை பேசியிருக்கிறார்.

அதில், "இப்போதைக்கு இல்லை (ஓய்வு பற்றி). நான் இன்னும் ஐ.பி.எல். விளையாடுகிறேன். எனது திட்டங்களை மிகவும் எளிமையாக வைத்திருக்கிறேன். நான் அதை ஒரு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே தீர்மானிப்பேன். எனக்கு தற்போது 43 வயது. இந்த ஜூலை மாதம் நான் முடியும்போது, எனக்கு 44 வயது இருக்கும்.

நான் இன்னும் ஒரு வருடம் விளையாட வேண்டுமா? என்று முடிவு செய்ய எனக்கு 10 மாதங்கள் உள்ளன. ஆனால் முடிவெடுப்பது நான் அல்ல. எனது உடல்தான் அதனை முடிவு செய்கிறது. இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் எனது முழு கவனம் உள்ளது. அது குறித்து (ஓய்வு) 8-10 மாதங்களுக்கு பிறகு பார்ப்போம்" என்று கூறினார்.

Read Entire Article