ஐ.பி.எல்.: சென்னை அணியில் தோனியின் இடத்தை இந்த வீரரால் நிரப்ப முடியும் - சைமன் டவுல் நம்பிக்கை

2 months ago 12

மும்பை,

10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அணியில் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் விபரங்களை அறிவிக்க வரும் 31ம் தேதி கடைசி நாளாகும். இதனால் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்கவைத்துக்கொள்ளும் என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. 43 வயதான தோனி தற்போது ஒரு வீரராக மட்டுமே ஐ.பி.எல் தொடரில் ஆடி வருகிறார். அதோடு அன் கேப்டு வீரராக நான்கு கோடி ரூபாய்க்கு தோனி தக்கவைக்கப்பட்டாலும் அடுத்த சீசனில் இம்பேக்ட் வீரராகவே களமிறங்குவார் என்ற தகவலும் பெருமளவு பரவி வருகிறது.

இதன் காரணமாக தோனியின் இடத்தை பூர்த்தி செய்யும் ஒரு வீரரை ஏலத்தில் எடுக்க சென்னை அணி ஆர்வம் காட்டும். அந்த வகையில் தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட்டை சிஎஸ்கே ஏலத்தில் எடுக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.ஏனெனில் ரிஷப் பண்ட் டெல்லி அணியிலிருந்து வெளியேறி மெகா ஏலத்தில் கலந்து கொள்வார் என்று கடந்த சில வாரங்களாகவே பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான சைமன் டவுல் தோனியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கான இடத்தை ரிஷப் பண்ட்டால் நிரப்ப முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில், "சென்னை அணி முதல் 3 வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா மற்றும் மதீஷா பதிரானா ஆகியோரை தக்க வைக்கும் என்று நினைக்கிறேன். அதே வேளையில் தோனியின் இடத்தை பூர்த்தி செய்யும் ஒரு வீரரையும் அவர்கள் தேர்ந்தெடுத்தாக வேண்டும். அப்படி ரிஷப் பண்ட் ஏலத்தில் பங்கேற்கும் பட்சத்தில் நிச்சயம் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அவரை எடுக்க சென்னை அணி நிச்சயம் முயற்சிப்பார்கள். ஏனெனில் தோனியை போன்று விக்கெட் கீப்பராக இருக்கும் ரிஷப் பண்ட் போட்டியின் முடிவை மாற்றக்கூடிய மேட்ச் வின்னராக செயல்பட கூடியவர். அதன் காரணமாக அவரை எவ்வளவு பெரிய தொகைக்கும் ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே அணி தயக்கம் காட்டாது" என்று கூறினார்.

Read Entire Article