சிட்னி,
இந்தியாவில் கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் பல இளம் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அந்த வகையில் லக்னோ அணிக்காக அறிமுகமான மயங்க் யாதவ் தொடர்ச்சியாக 145 - 155 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
குறிப்பாக முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருது வென்று அவர் 2வது போட்டியிலும் குறைந்த ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டநாயகன் விருது வென்றார். அதனால் பார்டர் - கவாஸ்கர் கோப்பையிலும் மயங்க் யாதவ் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஆனால் முழுமையாக 5 போட்டிகள் கூட விளையாடாத அவர் காயத்தை சந்தித்தார். அதன் பின் சில போட்டிகள் கழித்து மீண்டும் விளையாட வந்த அவர் முழுமையாக ஒரு ஓவர் வீசி முடிப்பதற்குள் மீண்டும் காயமடைந்து வெளியேறினார்.
அதன் பின் மீண்டும் குணமடைந்து கடந்த வங்காளதேச டி20 தொடரில் இந்தியாவுக்காக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் அதிரடியான வேகத்தில் பவுலிங் செய்து கவனத்தை ஈர்த்த மயங்க் யாதவ் மீண்டும் காயத்தை சந்தித்தார். அதன் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் தேர்ந்தெடுக்கப்படாத அவர் அடுத்ததாக நடைபெறும் இங்கிலாந்து டி20 தொடரிலும் தேர்வாகவில்லை.
இந்நிலையில் மயங்க் யாதவ் போன்ற பவுலர்கள் ஐ.பி.எல். சம்பளத்தை பெற்றால் போதும் என்ற நோக்கத்துடன் இருப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அதற்கான காரணம் குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "மயங்க் யாதவ் இளைஞராக இருந்தும் காயமடைகிறார். சமீபத்தில் அவருடைய உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டின் புள்ளி விவரங்களை பார்த்தேன். அவர் ஒரே ஒரு உள்ளூர் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் போதுமான அளவுக்கு விளையாடவில்லை. அதனால் அவரிடம் வெறும் வேகம் மட்டுமே இருக்கிறது என்று நினைக்கிறேன்.
145 - 150 கிலோமீட்டர் வேகத்தில் அவரைப் போலவே வீசக்கூடிய இன்னும் சில பவுலர்கள் இருக்கிறார்கள். ஆனால் இளம் இந்திய வீரர்கள் வெறும் வேகத்தை மட்டுமே நம்பி வருகிறார்கள் என்று நினைக்கிறேன். குறிப்பாக சில வீரர்கள் நாம் அதிரடியான வேகத்தில் பந்து வீசி ஐ.பி.எல். ஒப்பந்தத்தை பெற்றால் மகிழ்ச்சியாகி விடலாம். அத்துடன் அனைத்தும் கிடைத்து விடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
அப்படி ஐ.பி.எல். தொடரில் ஒப்பந்தம் கிடைத்ததும் எல்லாம் கிடைத்து விட்டதாக நினைக்கின்றனர். அந்த ஒப்பந்தம் கிடைத்ததும் டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி விளையாட வேண்டும் என்பதை அவர்கள் கற்க விரும்புவதில்லை. தங்களுக்கு தாங்களே எப்படி பந்து வீசி சகிப்புத்தன்மையை பெற வேண்டும் என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்வதில்லை" என்று கூறினார்.