பெங்களூரு,
கர்நாடகா மாநிலம் பெங்களூரு மகாதேவபுரா பகுதியில் ஜித்தன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் சாப்ட்வேர் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இதற்காக அவர் தங்கும் விடுதியில் தங்கியிருந்து வருகிறார். அதுபோல் கேரளாவை சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ஜித்தனும், அந்த இளம்பெண்ணும் கடந்த சில ஆண்டாக காதலித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காதலர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் காதலி ஜித்தனுடன் பேசாமல் இருந்துள்ளார். இதன்காரணமாக மனம் உடைந்த நிலையில் ஜித்தன் இருந்து வந்தார். சம்பவத்தன்று இரவு தனது தங்கும்விடுதி அறையில் இருந்து ஜித்தன் தனது காதலிக்கு செல்போனில் வீடியோ அழைப்பில் பேசியுள்ளார். அப்போது தன்னுடன் பேசாமல் இருப்பது பற்றி கேள்வி கேட்டுள்ளார். இதனால் காதலிக்கும் அவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
காதலி வீடியோ அழைப்பில் இருந்த போதே திடீரென்று மதுபாட்டிலை உடைத்த ஜித்தன் தனது கை நரம்பை அறுத்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காதலி, சாமர்த்தியமாக செயல்பட்டு ஜித்தன் தங்கியுள்ள தங்கும்விடுதி அறை, அவரது செல்போன் எண் ஆகியவற்றை கொடுத்து, அவர் தற்கொலைக்கு முயன்றது பற்றி மகாதேவபுரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜித்தனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் ஜித்தன் மீது தற்கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.