ஐ.பி.எல். கிரிக்கெட்: லக்னோ - குஜராத் அணிகள் இன்று மோதல்

1 week ago 4

லக்னோ,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் மாலை 3.30 மணிக்கு லக்னோவில் அரங்கேறும் 26-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொள்கிறது.

லக்னோ அணி இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி 3-ல் வெற்றி (ஐதராபாத், மும்பை, கொல்கத்தாவுக்கு எதிராக), 2-ல் தோல்வி (டெல்லி, பஞ்சாப்புக்கு எதிராக) கண்டுள்ளது. முந்தைய கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி 238 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. அந்த அணியில் நிகோலஸ் பூரன் (3 அரைசதத்துடன் 288 ரன்கள்), மிட்செல் மார்ஷ் (4 அரைசதம் உள்பட 265 ரன்கள்) சூப்பர் பார்மில் உள்ளனர். ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்ட கேப்டன் ரிஷப் பண்ட் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறார். 4 ஆட்டங்களில் ஆடி 19 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கும் அவர் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். பந்து வீச்சில் ஷர்துல் தாக்குர், ஆகாஷ் தீப், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய் பலம் சேர்க்கிறார்கள்.

குஜராத் அணி தனது தொடக்க ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் தோல்வியை தழுவியது. அதன் பிறகு மும்பை, பெங்களூரு, ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளை அடுத்தடுத்து துவம்சம் செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

பேட்டிங்கில் சாய் சுதர்சன் (3 அரைசதத்துடன் 273 ரன்கள்), ஜோஸ் பட்லர் (202 ரன்கள்), கேப்டன் சுப்மன் கில், ரூதர்போர்டு நம்பிக்கை அளிக்கின்றனர். பந்து வீச்சில் முகமது சிராஜ், சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் பார்முக்கு திரும்பி இருப்பது புதிய தெம்பை கொடுக்கும்.

மொத்தத்தில் இரு அணிகளில் யாருடைய வெற்றிப்பயணத்துக்கு முட்டுக்கட்டை விழும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 4-ல் குஜராத்தும், ஒன்றில் லக்னோவும் வெற்றி பெற்றுள்ளன.

இதைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடக்கும் மற்றொரு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ், பஞ்சாப் கிங்சுடன் மோதுகிறது.

ஐதராபாத் அணி தனது தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு எதிராக 286 ரன்கள் குவித்ததுடன் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பிறகு அவர்களது பலமான அதிரடி ஜாலமே ஆபத்தாக மாறி விட்டது அதிரடியை தொடர முயற்சித்து லக்னோ, டெல்லி, கொல்கத்தா, குஜராத் அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து பரிதாபமான நிலையில் இருக்கிறது.

அதிரடி ஆட்டக்காரர்கள் அதிகம் நிறைந்த ஐதராபாத் அணியில் முக்கியமான தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் முதல் 2 ஆட்டங்களுக்கு பிறகு நிலைத்து நிற்கவில்லை. மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா தொடர்ந்து சொதப்புகிறார். முதல் ஆட்டத்தில் சதம் அடித்து கலக்கிய இஷான் கிஷன் அதன் பிறகு வந்த வேகத்தில் நடையை கட்டுகிறார். நிதிஷ்குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசெனும் சோபிக்கவில்லை. மேலும் அந்த அணியின் பந்து வீச்சும் பாராட்டும் வகையில் இல்லை. முகமது ஷமி, கேப்டன் கம்மின்ஸ், ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் இருந்தும் பந்து வீச்சில் பெரிய அளவில் தாக்கம் இல்லாதது பின்னடைவாக உள்ளது.

ஐதராபாத் அணி சரிவில் இருந்து மீண்டு எழுச்சி பெற வேண்டும் என்றால் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் மட்டுமின்றி பந்து வீச்சாளர்களும் ஒருசேர ஜொலிக்க வேண்டியது அவசியமானதாகும்.

பஞ்சாப் அணி 4 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி (குஜராத், லக்னோ, சென்னைக்கு எதிராக), ஒரு தோல்வி (ராஜஸ்தானிடம்) என 6 புள்ளிகளுடன் இருக்கிறது. பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் கடந்த ஆட்டத்தில் 39 பந்தில் சதம் விளாசிய பிரியான்ஷ் ஆர்யா, கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், நேஹல் வதேரா, ஷசாங் சிங்கும், பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், லோக்கி பெர்குசன், யுஸ்வேந்திர சாஹல், மார்கோ யான்செனும் வலுவூட்டுகிறார்கள்.

சமபலம் வாய்ந்த அணிகள் களம் காணுவதால் அனல் பறக்கும் என்று நம்பலாம். இவ்விரு அணிகளும் இதுவரை 23 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16-ல் ஐதராபாத்தும், 7-ல் பஞ்சாப்பும் வெற்றி கண்டுள்ளன.

Read Entire Article