ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை - பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை

1 week ago 3

மும்பை,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கும் 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

5 முறை சாம்பியனான மும்பை அணி இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி ஒன்றில் வெற்றியும் (கொல்கத்தாவுக்கு எதிராக), 3-ல் தோல்வியும் (சென்னை, குஜராத், லக்னோவுக்கு எதிராக) சந்தித்துள்ளது. முந்தைய லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் 204 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி நெருங்கி வந்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஹர்திக் பாண்ட்யா 5 விக்கெட்டுகள் வீழ்த்தியும் பலன் இல்லை.

பந்து வீச்சில் பலவீனமாக இருக்கும் மும்பை அணிக்கு புத்துயிர் ஊட்டும் விதமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நேற்று முன்தினம் இரவு அணியுடன் இணைந்தார். கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டின் போது முதுகில் காயமடைந்த பும்ரா, ஆபரேசன் செய்த பிறகு எந்த போட்டியிலும் விளையாடவில்லை. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை மேற்கொண்ட அவர் உடல்தகுதியை எட்டியதை தொடர்ந்து மும்பையுடன் கைகோர்த்துள்ளார். உடனடியாக பயிற்சியை தொடங்கிய பும்ரா, பெங்களூருவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தின் அணித் தேர்வுக்கு தயாராக இருப்பதாக மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனே நிருபர்களிடம் தெரிவித்தார்.

துல்லியமாக பந்து வீசி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் திறன் படைத்த பும்ராவின் வருகை நிச்சயம் மும்பை அணிக்கு புது தெம்பை அளிக்கும். பும்ரா ஐ.பி.எல்.-ல் 133 ஆட்டங்களில் ஆடி 165 விக்கெட்டுகள் வீழ்த்தி இருப்பது கவனிக்கத்தக்கது.

வலை பயிற்சியில் பந்து தாக்கி கால்முட்டியில் காயமடைந்ததால் லக்னோவுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் ஆடாத ரோகித் சர்மா பார்க்க நன்றாக தெரிகிறார். பயிற்சிக்கு பிறகு அவரது உடல்தகுதியை ஆராய்ந்து ஆடும் லெவனில் சேர்ப்பது குறித்து முடிவு செய்வோம் என்றும் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே குறிப்பிட்டார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தனது முதல் இரு ஆட்டங்களில் கொல்கத்தா, சென்னை அணிகளை போட்டுத்தாக்கியது. கடந்த ஆட்டத்தில் குஜராத்திடம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 'சரண்' அடைந்தது. பில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல் ஆகிய 3 பேரும் முதல் 5 ஓவருக்குள் அடங்கியதால் பெரிய ஸ்கோர் எடுக்க முடியாமல் போய் விட்டது.

பெங்களூரு அணி மும்பையை அதன் சொந்த ஊரில் வீழ்த்தி 10 ஆண்டுகள் ஆகி விட்டது. இந்த மைதானத்தில் மும்பைக்கு எதிராக 11 ஆட்டங்களில் ஆடியிருக்கும் பெங்களூரு அணி அதில் 3-ல் வெற்றியும், 8-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. அதனால் அந்த நீண்ட கால சோகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வரிந்து கட்டி நிற்பார்கள்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 19-ல் மும்பையும், 14-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன.

Read Entire Article