ஐ.பி.எல். 2025: விராட் கோலிதான் பெங்களூரு அணியின் கேப்டன் - இந்திய முன்னணி வீரர் உறுதி

3 days ago 3

பெங்களூரு,

ஐ.பி.எல். 2025 தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக ( நவம்பர் 24 & 25-ம் தேதிகளில்) நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.

இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ஏலத்திற்கு முன்பாக விராட் கோலி, ரஜத் படிதார் மற்றும் யாஷ் தயாள் ஆகிய 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்திருந்தது. கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ், மேக்ஸ்வெல், சிராஜ் உள்ளிட்ட முன்னணி வீரர்களை விடுவித்தது. ஏலத்தின்போதும் இவர்கள் மீது ஆர்வம் காட்டாத பெங்களூரு அணி நிர்வாகம் ஆர்டிஎம் கார்டை ஸ்வப்னில் சிங்கிற்கு பயன்படுத்தியது ஆச்சரியமாக அமைந்தது.

மொத்தத்தில் அடுத்த சீசனுக்கான பெங்களூரு அணியில் 22 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். ஆனால் அணி நிர்வாகம் கேப்டன்ஷிப் அனுபவமுள்ள எந்த வீரர்களையும் ஏலத்தில் எடுக்கவில்லை.

இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அடுத்த கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் மெகா ஏலத்திற்கு முன்பாக நிர்வாகம் விராட் கோலியை கேப்டனாக நியமிக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்திய முன்னணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்த ஆண்டு பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலிதான் என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இம்முறை பெங்களூரு அணி மிகச்சிறப்பாக ஏலத்தில் கலந்து கொண்டு அருமையான வீரர்களை வாங்கியுள்ளதாக கருதுகிறேன். அணியின் பேலன்ஸ் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் சரியான முறையில் பணத்தை பயன்படுத்தி மிகச்சரியான வீரர்களை வாங்கி இருக்கிறார்கள்.

இருப்பினும் ஆர்.சி.பி அணியில் கேப்டன்சி அனுபவம் உடைய ஒரு வீரரை ஏலத்தில் எடுக்கவில்லை. இதன் காரணமாக நிச்சயம் விராட் கோலிதான் அடுத்த ஐபிஎல் தொடரில் அந்த அணியின் கேப்டனாக இருப்பார் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்" என்று கூறினார்.

Read Entire Article