ஐ.பி.எல்.2025: விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்படாதது ஏன்..? பயிற்சியாளர் விளக்கம்

3 hours ago 2

பெங்களூரு,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் மார்ச் 21-ம் தேதி தொடங்க உள்ளது.10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக ( நவம்பர் 24 & 25-ம் தேதிகளில்) நடைபெற்றது.

இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர். இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது கேப்டனான பாப் டு பிளெஸ்சிசை கழற்றி விட்டது. இதன் காரணமாக இந்த ஆண்டு பெங்களூரு அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

முன்னதாக நடைபெற்ற ஏலத்தில் அணியை வழிநடத்தும் வகையில் எந்த வீரரையும் பெங்களுரு நிர்வாகம் எடுக்கவில்லை. இதனால் விராட் கோலியே மீண்டும் பெங்களூரு அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் விராட் கோலியை தாண்டி பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விராட் கோலி ஏன் கேப்டனாக நியமிக்கப்படவில்லை? என்பது குறித்து அந்த அணியில் பயிற்சியாளரான ஆன்டி பிளவர் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "புதிய கேப்டன் உரையாடலில் நாங்கள் விராட் கோலியிடமும் நிறைய கருத்துகளை கேட்டோம். அவரும் தன்னுடைய கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்தார். அதுமட்டும் இன்றி அந்த விவாதத்தின்போது நேர்மையாக இருந்த அவர் முதிர்ச்சி அடைந்த தன்னுடைய கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார்.

எதிர்வரும் சீசனுக்காக அவர் ஒரு வீரராக ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் விளையாட இருப்பது மிகப்பெரிய விஷயம். நாம் அவரைப் பற்றி நல்ல விஷயங்களை பேச வேண்டும். விராட் கோலி கேப்டன் பதவியை விரும்பவில்லை. அணிக்காக முழு பங்களிப்பையும் வழங்க வேண்டும் என்பதிலேயே உறுதியாக இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட படிதாரை அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

எனவே நிச்சயம் பாப் டு பிளெஸ்சிஸுக்கு உதவியது போல் பட்டிதாருக்கும் விராட் கோலி உதவுவார் என்று நினைக்கிறோம். மேலும் இயல்பாகவே அவர் ஒரு தலைவர் என்பதால் அவருக்கு கேப்டன் பொறுப்பெல்லாம் பெரிய விஷயம் கிடையாது. அவர் நிச்சயம் அணிக்காகவே விளையாட விரும்புகிறார்" என்று கூறினார்.

Read Entire Article