ஐ.பி.எல். 2025: ரிஷப் பண்ட் தடுமாற காரணம் இதுதான் - இந்திய முன்னாள் வீரர்

5 hours ago 1

மும்பை,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மார்ச் 22-ந் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இதனிடையே இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் ஐ.பி.எல். தொடர் ஒருவாரம் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 57 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 13 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இந்த தொடருக்கு முன்னதாக நடைபெற்ற மெகா ஏலத்தில் ரூ.27 கோடி என்ற ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட ரிஷப் பண்ட் லக்னோ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ஆனால் அந்த வாய்ப்பில் கேப்டனாக மட்டுமின்றி பேட்ஸ்மேனாகவும் சொதப்பிய பண்ட் 11 போட்டிகளில் விளையாடி வெறும் 128 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதன் காரணமாக லக்னோ அணி புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் தடுமாறி வருகிறது. மீதமுள்ள 3 போட்டிகளில் வென்றால் மட்டுமே அந்த அணியால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளது.

இந்நிலையில் ரிஷப் பண்ட் பெரிய ரன்கள் குவிக்கக்கூடிய ஆட்டத்தை மறந்ததே இந்த தடுமாற்றத்திற்கு காரணம் என்று இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் கூறியுள்ளார்.

இது குறித்து விரிவாக பேசிய அவர் கூறுகையில், "ரிஷப் பண்ட் இன்னும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டை (டி20 மற்றும் ஒருநாள்) முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் சிறப்பான பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த ஐ.பி.எல். சீசனில் பெரும்பாலான போட்டிகளில் அவர் ஸ்டப்புகளுக்கு பின்னே அடிக்க முயற்சித்து அவுட்டானதை கவனித்தேன்.

ரிஷப் பண்ட் விளையாடிய சிறந்த போட்டியை எடுத்துப் பாருங்கள. அதில் அவர் எங்கே ரன்கள் அடித்திருப்பார்? என்பதையும் பாருங்கள். அந்தப் போட்டிகளில் எல்லாம் அவர் கவர்ஸ் திசையில் அல்லது இறங்கி சென்று நேராக அல்லது மிட் விக்கெட் அல்லது ஸ்கொயர் திசைகளில் அடித்திருப்பார். ஆனால் இப்போது அவர் ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற ஷாட்டுகளை அதிகம் முயற்சிக்கிறார். அந்த வகையில் தன்னுடைய சிறந்த ஆட்டத்தை மறந்துள்ள பண்ட் குழப்பத்தில் சிக்கியுள்ளார் என்று நான் கருதுகிறேன்" என கூறினார்.

Read Entire Article