
ஜெய்ப்பூர்,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். வெற்றிகரமாக 17 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இதன் 18-வது சீசன் வருகிற 22-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வருகிற 23-ம் தேதி எதிர்கொள்கிறது.
இந்நிலையில் நடப்பு சீசனில் ராஜஸ்தான் அணியின் முதல் 3 போட்டிகளுக்கான புதிய கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கான காரணம் என்னவெனில், ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு விரலில் ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அது சரியாக இன்னும் சில நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் சஞ்சு சாம்சன் முதல் 3 போட்டிகளில் விக்கெட் கீப்பராக அல்லாமல் முழு நேர பேட்ஸ்மேனாக மட்டும் களமிறங்குகிறார். அதன் காரணமாக கேப்டன் பொறுப்பு ரியான் பராக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.