
பெங்களூரு,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் மார்ச் 21-ம் தேதி தொடங்க உள்ளது.10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக ( நவம்பர் 24 & 25-ம் தேதிகளில்) நடைபெற்றது.
இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர். இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ஏலத்திற்கு முன்பாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, ரஜத் படிதார் மற்றும் யாஷ் தயாள் ஆகிய 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்திருந்தது.
அதுபோக ஏலத்தில் பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டன் , புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட முன்னணி வீரர்களை வாங்கியது. ஆனால் கடந்த சீசனின் கேப்டனான பாப் டு பிளெஸ்சிசை அந்த அணி கழற்றி விட்டது. இதன் காரணமாக இந்த ஆண்டு பெங்களூரு அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முன்னதாக நடைபெற்ற ஏலத்தில் அணியை வழிநடத்தும் வகையில் எந்த வீரரையும் பெங்களுரு நிர்வாகம் எடுக்கவில்லை. இதனால் விராட் கோலியே மீண்டும் ஆர். சி. பி. அணிக்குக் கேப்டன் பொறுப்பை ஏற்பார் என கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று( பிப்.. 13ம் தேதி) பெங்களுரு அணி தங்களின் கேப்டனை அறிவிப்பதாக தெரிவித்து இருந்தது. அந்தவகையில் வரும் ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் படிதார் செயல்படுவார் என்று ஆர்.சி.பி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.