
மும்பை,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இதில் ஒவ்வொரு அணியும் 14 லீக் ஆட்டங்களில் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
நடப்பு தொடரில் இதுவரை எந்த அணியும் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெறவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. 4 பிளே-ஆப் இடங்களுக்கு 7 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதனிடையே இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டை காரணமாக எல்லைப்பகுதியில் பதற்றம் அதிகரித்ததால் ஐ.பி.எல். தொடர் ஒருவாரம் தள்ளிவைக்கப்படுவதாக அடுத்த நாளில் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்தியா- பாகிஸ்தான் சண்டை முடிவுக்கு வந்து இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து ஐ.பி.எல். போட்டி இன்று (சனிக்கிழமை) தொடங்கி ஜூன் 3-ந் தேதி வரை நடைபெறும் என்று கடந்த 12-ந் தேதி அறிவித்தது. எஞ்சிய ஆட்டங்களுக்கான திருத்தி அமைக்கப்பட்ட அட்டவணையும் வெளியிடப்பட்டது.
இதன்படி பாதியில் ரத்து செய்யப்பட்ட பஞ்சாப்- டெல்லி அணிகள் இடையிலான மோதல் உள்ளிட்ட 13 லீக் ஆட்டங்கள் பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, மும்பை, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் அரங்கேறுகிறது. லீக் சுற்று வருகிற 27-ந் தேதி நிறைவு பெறுகிறது. முதலாவது தகுதி சுற்று 29-ந் தேதியும், வெளியேற்றுதல் சுற்று 30-ந் தேதியும், இரண்டாவது தகுதி சுற்று ஜூன் 1-ந் தேதியும், இறுதிப்போட்டி ஜூன் 3-ந் தேதியும் நடைபெறுகிறது. 'பிளே-ஆப்' சுற்று நடைபெறும் இடங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், 8 நாள் இடைவெளிக்கு பிறகு திருத்தி அமைக்கப்பட்ட புதிய அட்டவணையின்படி 58-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது. நடப்பு தொடரில் இதுவரை குஜராத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் முறையே பிளே ஆப் சுற்று வாய்ப்பில் முன்னிலையில் உள்ளன.
இந்நிலையில் இந்த ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணி கோப்பையை வெல்லும் என்று இந்திய முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா கணித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்த வருடம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வித்தியாசமான முறையில் விளையாடி வருகிறது. இந்த அணி கோப்பையை வெல்ல வலுவான வாய்ப்புகள் உள்ளன. அவர்களது பந்துவீச்சு வலுவாக முன்னேறியுள்ளது. சின்னசாமி மைதானத்தில் 150 மற்றும் 136 ரன்கள் போன்ற ஸ்கோர்களை வைத்து அவர்கள் வென்றுள்ளனர்.
அவர்களது புதிய கேப்டன் நடப்பு தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸை இரண்டு முறை வீழ்த்தியுள்ளார். நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால் பெங்களூரு இறுதியாக 18 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வெல்லும். இது விராட் கோலியின் ஆண்டாக இருக்கலாம்" என்று கூறினார்.