
மும்பை,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை (சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டனில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ெகால்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதையொட்டி 10 அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தொடரில் 2008-ம் ஆண்டு ஜூனியர் உலகக்கோப்பையை வென்ற விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தன்மய் ஸ்ரீவஸ்தவா நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
35 வயதான தன்மய் ஸ்ரீவஸ்தவா ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார். அந்த ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அதிக ரன் குவித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்வதில் முக்கிய பங்கு வகித்த தன்மய் ஸ்ரீவஸ்தவாவின் கிரிக்கெட் கெரியர் எதிர்பார்த்தபடி செல்லவில்லை. இதனால் 2020-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற அவர் தற்போது நடுவராக களமிறங்க உள்ளார்.