
சென்னை,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடரில் கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இந்த தொடரில் சென்னை அணி தனது தொடக்க ஆட்டத்தில் வரும் 23ம் தேதி மும்பை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது. இந்நிலையில், இப்போட்டிக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு, நடப்பு ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்துள்ளார்.
அதன்படி அவர் தேர்வு செய்துள்ள அணியில் தொடக்க வீரர்களாக அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ளார். மேற்கொண்டு அணியின் மூன்றாம் வரிசையில் ரச்சின் ரவீந்திராவிற்கு வாய்ப்பு கொடுத்துள்ள ராயுடு, நான்காம் இடத்தில் ராகுல் திரிபாதியை சேர்த்துள்ளார்.
இருப்பினும் அந்த இடத்தில் அவர் மேற்கொண்டு தீபக் ஹூடா மற்றும் விஜய் சங்கர் ஆகியோரும் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார். அவர்களைத் தொடர்ந்து அணியின் அதிரடி வீரரான ஷிவம் துபேவுக்கு 5ம் இடத்தை ஒதுக்கியுள்ளார்.
அதன்பின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு 6ம் இடத்தையும், மகேந்திர சிங் தோனிக்கு 7ம் இடத்தையும் வழங்கியுள்ள ராயுடு, 8வது இடத்தில் மற்றொரு ஆல் ரவுண்டரான சாம் கரணை தேர்ந்தெடுத்துள்ளார். இதுதவிர்த்து பந்துவீச்சை பொறுத்தவரையில் ரவிச்சந்திரன் அஸ்வின், அன்ஷுல் காம்போஜ் மற்றும் மதீஷா பதிரானா ஆகியோருக்கு தனது அணியில் வாய்ப்பு வழங்கியுள்ளார்.
அம்பத்தி ராயுடு தேர்வு செய்த பிளேயிங் லெவன்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி/ தீபக் ஹூடா/ விஜய் சங்கர், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), சாம் கர்ரண், ரவிச்சந்திரன் அஸ்வின், அன்ஷுல் கம்போஜ், மதீஷா பதிரனா.