
சிட்னி,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இன்று தொடங்குகிறது. கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொடர் 18-வது ஆண்டாக வீறுநடை போடுகிறது. இதுவரை நடந்துள்ள 17 தொடர்களில் அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளன.
இந்த நிலையில் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி மே 25-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
முன்னதாக ஐ.பி.எல். தொடரில் அதிக ரன் குவிக்கும் வீரருக்கு ஆரஞ்சு நிற தொப்பியும், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தும் வீரருக்கு ஊதா நிற தொப்பியும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆட்டத்தின்போது இந்த தொப்பி மாறிக் கொண்டே இருக்கும். இறுதிப்போட்டி முடிவில் யார் முதலிடத்தில் இருக்கிறார்களோ? அவர்களை இந்த தொப்பி அலங்கரிக்கும். அத்துடன் தலா ரூ.10 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் இந்த தொடரில் அதிக ரன் குவித்து ஆரஞ்சு தொப்பி மற்றும் அதிக விக்கெட் வீழ்த்தி ஊதா நிற தொப்பியை கைப்பற்றும் வீரர்கள் குறித்து தனது கணிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது கணிப்பின் படி, டிராவிஸ் ஹெட் அதிக ரன் குவிக்கும் வீரராகவும், குல்தீப் யாதவ் அதிக விக்கெட் வீழ்த்தும் பவுலராகவும் இருப்பார் என்று கூறியுள்ளார்.