
அகமதாபாத்,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 97 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 244 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி தரப்பில் களமிறங்கிய மேக்ஸ்வெல் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஐ.பி.எல். வரலாற்றில் அவர் டக் அவுட் ஆவது இது 19-வது முறையாகும். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனையை அவர் படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. மேக்ஸ்வெல் - 19 முறை
2. ரோகித் சர்மா/தினேஷ் கார்த்திக் - 18 முறை
3. பியூஷ் சாவ்லா/சுனில் நரைன் - 16 முறை