ஐ.நாவில் காஷ்மீர் பிரச்சினையை குறித்து பாகிஸ்தான் பிரதமர் பேச்சு: இந்தியா தக்க பதிலடி

3 months ago 19

வாஷிங்டன்: ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பியதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா, அவரின் பேச்சு ‘பாசாங்குதனத்தின் மோசமான நிலை’ என்று சாடியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர்.

அந்த வகையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நேற்று ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பினார். தனது 20 நிமிட உரையில் காஷ்மீர் பிரச்சினை குறித்தே அவர் அதிக நேரம் பேசினார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்தது ஒருதலைப்பட்சமான முடிவு என குற்றம் சாட்டிய ஷபாஸ் ஷெரீப் அதை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தினார்.

மேலும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு இணங்க காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வுக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தார். இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது. இந்திய தூதரக அதிகாரி பவிகா மங்களானந்தன் பேசியதாவது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் காஷ்மீர் பிரச்சினைகள் குறித்த கருத்து கேலிக்கூத்தானது. பாகிஸ்தான் இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்க விரும்புகிறது. இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியான ஜம்மு காஷ்மீரில் தேர்தலை சீர்குலைக்க பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

உலகம் அறிந்தது போல், பாகிஸ்தான் நீண்ட காலமாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அதன் அண்டை நாடுகளுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தியுள்ளது. அத்தகைய நாடு வன்முறையைப் பற்றி எங்கும் பேசுவது பாசாங்குத்தனம் இந்தியாவிற்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஐ.நாவில் காஷ்மீர் பிரச்சினையை குறித்து பாகிஸ்தான் பிரதமர் பேச்சு: இந்தியா தக்க பதிலடி appeared first on Dinakaran.

Read Entire Article