நன்றி குங்குமம் தோழி
‘‘நான் சென்னையில்தான் வளர்ந்தேன். ஆனால் எனக்கு கிராம வாழ்க்கையில் அதிக ஆர்வம் இருந்தது. 8 வருடங்களுக்கு முன்பு வேலையை துறந்துவிட்டு இயற்கை விவசாயம் செய்ய நினைத்தேன். நானும் என் கணவரும் இணைந்துதான் இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கினோம்” என்கிறார் அர்ச்சனா ஸ்டாலின். இளம் வயதிலிருந்தே விவசாயத்தின் மீது ஆர்வமுள்ள இவர், ஆர்கானிக் முறையில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள் என அனைத்தையும் உற்பத்தி செய்து வருகிறார். மேலும் கூட்டு விவசாயம் மூலம் 300க்கும் மேற்பட்ட விவசாயிகளை ஆதரித்து வருகிறார்.“நான் முதலில் இயற்கை விவசாயம் செய்யும்போது அது எனக்கு மன நிறைவை கொடுத்தது. அப்போதுதான் இயற்கை விவசாயத்தின் பலன்களும் அதற்கான தேவையும் எனக்கு புரிய வந்தது. ஆர்கானிக் முறையில் விளைவிக்கக்கூடிய பழங்களும் காய்கறிகளும் மக்களுக்கு எளிதாக கிடைக்க வேண்டும். ஆதரவற்ற விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டுமென்ற நோக்கத்தில்தான் ‘மை ஹார்வெஸ்ட் ஃபார்ம்’ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கினோம். இது ஒரு ஆன்லைன் நிறுவனம்தான். நான் என் கணவருடன் சேர்ந்து விவசாயத்தை தொடங்கும்போது இயற்கை விவசாயத்தில் இருந்த சில சிக்கல்களை எங்களால் பார்க்க முடிந்தது. ஆரம்பத்தில் நாங்கள் விளைவித்த பொருட்களை என்ன விலைக்கு, எங்கு விற்பனை செய்வது என்று தெரியல. அதன் பின்னர் விவசாயிகளுடன் சேர்ந்து கூட்டு விவசாயம் தொடங்க திட்டமிட்டோம்.
அதில் பயிர் விளைவிப்பது, விற்பனை, விலை, உரங்கள் என அனைத்தும் அவர்களுடன் சேர்ந்து பகிர்ந்துகொள்ள முடிந்தது. கூட்டு விவசாயம் செய்யும்போது விவசாயிகளுக்கான அனைத்து ஆதரவும் கிடைக்கும். இதன் மூலம் ஒருவரையொருவர் சப்போர்ட் செய்துகொள்ள முடியும். கூட்டு விவசாயம் ஆரம்பிக்க முக்கிய காரணம் இளைஞர்களும் விவசாயம் செய்ய வேண்டும் என்பது தான். அதையும் நாங்க சாதித்திருக்கிறோம். நாங்க தொடங்கிய இந்த கூட்டு விவசாய முறையில் அதிகமாக இளைஞர்கள்தான் உள்ளனர். இவர்கள் அனைவரும் இயற்கை விவசாயத்தை விரும்பி ஆர்வத்துடன் செய்து வருகிறார்கள். இதன் மூலம் 300க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவளிக்க முடிகிறது’’ என்றவர், கூட்டு விவசாய முறை பற்றி தெரிவித்தார்.‘‘பொதுவாக விவசாயிகள் ஏதேனும் ஒரு பயிரையோ, உணவுப்பொருளையோ தேர்ந்தெடுத்து அதை மட்டும்தான் பயிர் செய்வார்கள். ஆனால் இந்த கூட்டு விவசாய முறையில் பல வகையான பயிர்களையும், காய்கறிகளையும், பழங்களையும் விளைவிக்கலாம். இவ்வாறு இயற்கை விவசாய முறையில் விளையும் பொருட்களை எல்லோராலும் வாங்கக்கூடிய விலையில்தான் விற்பனை செய்கிறோம். இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இருவரும் பயனடைய முடியும். எல்லோருக்கும் ஆரோக்கியமான உணவுப்பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்கான கூட்டு முயற்சிதான் இது. ரசாயன உரங்களால் உணவுப்பொருட்களின் ஆரோக்கியம் குறைந்து, நமக்கு கிடைக்கக்கூடிய முழு ஊட்டச்சத்துக்களும் கிடைக்காமல் போய்விடுகிறது.
அதற்கு ஒரே தீர்வு இயற்கை விவசாயம்தான். நம் முன்னோர்கள் உணவே மருந்து என்றார்கள். கடந்த சில தலைமுறைகளாக உடல் சார்ந்த பிரச்னைகளும் நோய்களும் அதிகரித்திருக்கின்றன. மாறிப்போன உணவுப்பழக்கமும் இதற்கு ஒரு காரணம். இதனை கட்டுப்படுத்த மீண்டும் நல்ல உணவுப்பழக்கத்தினை கடைபிடிக்க வேண்டும். அதற்கு எல்லோருக்கும் ஆரோக்கியமான உணவுப்பொருட்கள் கிடைக்க வேண்டும். எங்களின் விவசாயத்தில் நாங்க தீங்கு தரக்கூடிய ரசாயனங்களை பயன்படுத்துவதில்லை. இயற்கை உரங்கள் மட்டும்தான் பயன்படுத்துகிறோம். பூச்சிக்கொல்லிக்கு பதில் பூச்சி விரட்டிகளை பயன்படுத்துகிறோம். இதனை நாங்க மட்டுமில்லை எங்களுடன் கூட்டு விவசாயம் செய்பவர்களுக்கு இந்த வழிமுறைகளை கூறிவருகிறேன். இயற்கை விவசாயத்தை பற்றின விழிப்புணர்வை குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்து வருகிறேன். இதன் மூலம் விவசாயத்தின் முக்கியத்துவத்தை அறிவார்கள், உணவையும் வீணாக்கமாட்டார்கள்’’ என்றவர் அவரின் நிறுவனம் குறித்து விவரித்தார். “காய்கறிகளையும் கீரைகளையும் ஆரோக்கியமான முறையில் விளைவிக்கத்தான் இந்த இயற்கை விவசாயத்தை தொடங்கினோம். அதன்பிறகு பழங்கள், தானியங்களையும் பயிர் செய்தோம். பழங்கள், காய்கறிகளை தாண்டி இன்னும் நிறைய உணவுப்பொருட்கள் ஆரோக்கியமில்லாமல்தான் இருக்கின்றன. குறிப்பாக வெள்ளை சர்க்கரை தீங்கினை ஏற்படுத்தும் என தெரிந்தும் அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிடுகிறோம்.
எனவேதான் சர்க்கரைக்கு பதிலாக வெள்ளம், கருப்பட்டி சேர்த்த உணவு வகைகளை தயாரித்து விற்பனை செய்கிறோம். சில நேரங்களில் பெரும்பாலானோர் காய்கறிகளை சமைத்து சாப்பிடவே நேரமில்லை என்கிறார்கள். அதற்காகவே சில உணவுப் பொருட்களை சுலபமாக செய்து சாப்பிடும் வகையில் தயாரித்துள்ளோம். வெண்டைக்காயை எப்படி சாப்பிட்டாலும் சலிப்பு தட்டுகிறது என்கிறவர்களுக்காக வெண்டைக்காய் கிரிஸ்ப் ஃப்ரை ஒன்றை தயாரித்தோம். மொறுமொறுவென்ற இந்த வெண்டைக்காய் சிப்ஸ் எண்ணெய் பயன்படுத்தாமல், வேக்கம் ஃப்ரையர் முறையில் ஃப்ரை செய்யப்பட்டது. இது போன்ற உணவுகளில் எண்ணெய் அதிகம் இருக்குமோ என்ற பயமில்லாமல் சாப்பிடலாம். இன்னொரு குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு உணவுப்பொருள் முடவாட்டுக்கால். உடல் வலி, கால் மூட்டு வலி போன்றவற்றுக்கு சிறந்த தீர்வு. அதை எளிதான முறையில் பொடியாக செய்து அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இதனை சுலபமாக சூப் செய்து குடிக்கலாம். மேலும் பாமாயில் போன்ற எண்ணெய்கள் இல்லாமல், சிறுதானியங்கள் ெகாண்டு கருப்பட்டி காஜுகத்லி, தூயமல்லி முறுக்கு போன்றவற்றை தயாரிக்கிறோம். தற்போது சுத்தமான பசு நெய்யும் விற்பனை செய்கிறோம். மொத்தம் 280க்கும் மேற்பட்ட உணவுப்பொருட்களை விளைவித்தும் தயார் செய்தும் சந்தைப்படுத்துகிறோம். உணவு மூலமே உடல் நலனை மேம்படுத்த முடியும். நோய் வந்ததும் அதன் மருத்துவ செலவுகளுக்கு பணத்தை செலவிடுவதை விட ஆரோக்கியமான உணவுப்பொருட்களில் பணத்தை முதலீடு செய்யலாம் என்ற விழிப்புணர்வு இப்போதுதான் மக்களிடையே பரவுகிறது.
ஆரோக்கியமான வாழ்விற்காக விலை சற்று கூடுதல் என்றாலும் வாங்கி சாப்பிட தயாராக உள்ளனர்” என்றவர், இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் விளக்குகிறார். “காலம் காலமாக விவசாயம் என்பது ஒரு வாழ்க்கை முறையாகத்தான் இருந்து வருகிறது. விவசாயம் சார்ந்துதான் மக்களின் வாழ்க்கை நகர்வும் இருந்தது. இதில் ஆண், பெண் என்கிற பாகுபாடு எல்லாம் கிடையாது. கிராமங்களில் 84%க்கும் மேற்பட்ட பெண்கள்தான் விவசாயத்தில் பங்கெடுக்கிறார்கள். நாற்று நடுவதில் தொடங்கி பெரும்பாலான விவசாய செயல்முறைகளில் ஈடுபடும் பெண்களுக்கு போதுமான ஊதியம் கிடைப்பதில்லை. அதனாலேயே எங்களுடன் கூட்டு விவசாயத்தில் இருக்கும் பெண்களுக்கு திருப்தியான சம்பளத்தையே கொடுக்கிறோம். லாபகரமான நோக்கிலும் சிலர் விவசாயம் செய்கின்றனர். அதிகமான விற்பனை நடக்க வேண்டுமென்பதற்காக ரசாயனங்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். அதில் ஆபத்துகளும் காத்திருக்கும். இயற்கை முறை விவசாயம் பொறுத்தவரையிலும் அப்படியில்லை.
அவர்களின் சொந்த நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து உணவுப் பொருட்களை விளைவிப்பதால் மன நிறைவாக இருக்கின்றனர். அவர்களுக்கு கிடைக்கக்கூடிய அதிகபட்ச நன்மையும் இதுதான். இயற்கை விவசாயத்தில் குறைந்த செலவிலேயே நிலத்தை பராமரிக்க முடியும். ஆரோக்கியமாக சாப்பிட வேண்டுமென்றால் வீட்டிலேயே காய்கறி
களையும் பழங்களையும் விளைவிக்கலாம். வார இறுதி நாட்களில் விவசாயம் செய்யலாம். முதலில் மக்களுக்கு இதைப்பற்றின விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இப்போதெல்லாம் நிறைய பாரம்பரியமான உணவுப்பொருட்களின் பயன்பாடு குறைந்து கொண்டே வருகிறது. அவற்றையெல்லாம் விளைவித்து அறுவடை செய்து அதை ஆவணப்படுத்தலாம். கடந்த 40லிருந்து 50 வருடங்களில் தொலைத்த எல்லாவற்றையும் நாம் மீட்டெடுக்க குறைந்தது 20 வருடங்களாவது ஆகும். எனவே அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவது நமது கடமை. பெண்கள் எல்லோரும் அவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தை கவனித்துக்கொள்கிறேன் என்ற பெயரில் தங்கள் மீதே அக்கறையில்லாமல் இருக்கக் கூடாது. பெண்கள் அவர்களுக்கு பிடித்ததை செய்ய முன்வரவேண்டும்’’ என்றார் அர்ச்சனா ஸ்டாலின்.
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்
The post ஐ.டி ஊழியர் டூ இயற்கை விவசாயி! appeared first on Dinakaran.