
துபாய்,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதன் முதலாவது அரைஇறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 264 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்டீவ் சுமித் 73 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 265 ரன்கள் இலக்கை நோக்கி பேட்டிங் செய்த இந்திய அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 267 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 84 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த ஆட்டத்தில் அடித்த அரைசதத்தையும் சேர்த்து ஐ.சி.சி. நடத்தும் ஒருநாள் தொடர்களான உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் விராட் கோலி இதுவரை 24 அரைசதங்கள் அடித்துள்ளார். இதன் மூலம் ஐ.சி.சி. ஒருநாள் தொடர்களில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் சச்சின் 23 அரைசதங்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அவரின் சாதனையை தகர்த்து விராட் புதிய சாதனை படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:-
1. விராட் கோலி - 24 அரைசதம்
2. சச்சி - 23 அரைசதம்
3. ரோகித் சர்மா - 18 அரைசதம்
4.குமார் சங்கக்கரா - 17 அரைசதம்
5. ரிக்கி பாண்டிங் - 16 அரைசதம்