சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி, ‘பசுவின் கோமியத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதோடு, பாக்டீரியா, பூஞ்சை, செரிமான கோளாறு உள்ளிட்ட பல உடல்நல பாதிப்புகளை எதிர்க்க சிறந்த மருத்துவ குணத்தை கொண்டுள்ளதால் அதை அருந்த வேண்டும்’ என்று நிகழ்த்திய உரை கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
மிகுந்த புகழ் பெற்ற இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் அறிவியல் ரீதியாக சிந்திக்காமல் பிற்போக்குத்தனமான, மூடநம்பிக்கையின் அடிப்படையில் பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் பசுக்கள் மற்றும் எருமைகளின் சிறுநீரை ஆராய்ச்சி செய்ததில் கோமியம் மனிதர்கள் குடிப்பதற்கு உகந்ததல்ல என தெரிவித்துள்ளது. இதை மனிதர்கள் அருந்தினால் பல மோசமான நோய்கள் ஏற்படும் என எச்சரித்துள்ளதை காமகோடி போன்றவர்கள் அறியாமல் இருப்பது மிகுந்த வியப்பை தருகிறது. வலதுசாரி அமைப்புகளை சேர்ந்தவர்கள் கூறுவதை வழிமொழிந்து காமகோடி பேசியிருக்கிறார் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
அறிவியல்பூர்வமாக கோமியம் குடிப்பதற்கு உகந்ததில்லை என உறுதியாக நம்பப்படுகிற நிலையில் அதற்கு விரோதமாக அறிவியல் நிறுவனத்தின் இயக்குநரே பேசியிருப்பது எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இத்தகைய பிற்போக்கு சிந்தனை கொண்ட ஒருவர் ஐ.ஐ.டி. இயக்குநராக இருப்பதற்கு தகுதியற்றவர். இவர் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைக்குரிய செயல்பாடுகளில் ஈடுபட்டவர் என்பதால் இவரைப் போன்றவர்கள் இப்பொறுப்பில் நீடிப்பது அங்கே படிக்கிற மாணவர்களின் எதிர்காலத்திற்கே உகந்ததல்ல. எனவே, இதைப் போன்ற கருத்துகள் கூறுவதை அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post ஐ.ஐ.டி. இயக்குநராக இருப்பதற்கு காமகோடி தகுதியற்றவர்: செல்வப்பெருந்தகை விமர்சனம் appeared first on Dinakaran.