டெல்லி: ஏழைகள், நடுத்தர மக்களின் வாழ்வில் செழிப்பை கொண்டு வர மகாலட்சுமியை பிரார்த்திக்கிறேன் என நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2025-26ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது, இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் என்பதால், நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றவுள்ளார்.
குடியரசுத் தலைவர் பேசிய பின்னர், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார நிதிநிலை ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்கிறார்.அதனைத் தொடர்ந்து, நாளை 8-வது முறையாக நாளைய தினம் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.
முன்னதாக, அவர் இன்று மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்வார். பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், முதல்கட்ட கூட்டத்தொடரின் இறுதியாக எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்தும் பேசுவார்.
இக்கூட்டத் தொடரில், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா, வங்கி சட்டங்கள் திருத்த மசோதா, ரயில்வே சட்டத்திருத்த மசோதா, பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா, எண்ணெய் வயல்கள் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு சட்டத்திருத்த மசோதா, விமான குத்தகை தொடர்பான மசோதா மற்றும் குடியேற்றம், வெளிநாட்டினர் மசோதா உட்பட 16 மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இன்று துவங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் 9 அமர்வுகளுடன் பிப்ரவரி 13ஆம் தேதி முடிவடைகிறது. 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 10ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ம் தேதி வரையிலும் நடக்க உள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார் அதில், ஏழைகள், நடுத்தர மக்களின் வாழ்வில் செழிப்பை கொண்டு வர மகாலட்சுமியை பிரார்த்திக்கிறேன். ஏழை மக்களை அன்னை லட்சுமி அசீர்வதிப்பார். இந்த நிதிநிலை அறிக்கை மக்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். பட்ஜெட் கூட்டத் தொடரில் ஏராளமான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. அனைவருக்குமான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும். மக்களின் மேம்பாட்டுக்காக தொடர்ந்து பாடுபடுவோம். மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாளை தாக்கலாகும் ஒன்றிய பட்ஜெட் நாட்டின் வளர்ச்சியை மேலும் உறுதி செய்யும். மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.இந்தியாவின் வளர்ச்சிக்கு அனைத்து எம்.பி.க்களும் பங்களிப்பார்கள் என நம்புகிறேன். 3ஆவது முறையாக ஆட்சி நடத்த மக்கள் எங்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளனர். மக்களின் மேம்பாட்டுக்காக நாள்தோறும் பணியாற்றி வருவதாக நாடாளுமன்றத்தில் மோடி பேசினார்.
The post ஏழைகள், நடுத்தர மக்களின் வாழ்வில் செழிப்பை கொண்டு வர மகாலட்சுமியை பிரார்த்திக்கிறேன்: பிரதமர் மோடி உரை appeared first on Dinakaran.