திருமலை,
திருப்பதி ஏழுமலையானை மிக அருகில் சென்று தரிசனம் செய்வதற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் மூன்று மாதங்களுக்கு முன்னரே திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. இந்த சேவையில் பங்கேற்க குலுக்கல் முறையில் (எலக்ட்ரானிக் லக்கி டிப்) பக்தர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். லக்கி டிப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்கள் உரிய கட்டணத்தை செலுத்தி, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதியில் சேவையில் கலந்துகொள்ள வேண்டும்.
அவ்வகையில் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளுக்கான பதிவு நாளை மறுநாள் (19.10.2024) தொடங்குகிறது. பிற தரிசன டிக்கெட்டுகளும் அடுத்தடுத்த நாட்களில் வெளியிடப்படுகின்றன.
இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை டிக்கெட் எலக்ட்ரானிக் டிப் பகுதியில் அக்டோபர் 19-ம் தேதி காலை 10 மணி முதல் அக்டோபர் 21-ம் தேதி காலை 10 மணி வரை பதிவு செய்யலாம்.
இவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களின் பெயர்கள் ஆன்லைனில் வெளியிடப்படும். அவர்கள் 23-ந்தேதி மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்தினால் அவர்களுக்கான ஆர்ஜித சேவை டிக்கெட் உறுதி செய்யப்படும்.
22-ந்தேதி காலை 10 மணியளவில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளான கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்படும். மெய்நிகர் சேவை டிக்கெட்டுகள் 22-ந்தேதி மாலை 3 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படும்.
அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு 23-ந்தேதி காலை 10 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கான தரிசன டிக்கெட் ஆன்லைன் ஒதுக்கீடு 23-ந்தேதி காலை 11 மணியளவில் வெளியிடப்படும்.
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோய்வாய்ப்பட்டவர்கள் ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக இலவச சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 23-ந்தேதி மாலை 3 மணியளவில் வெளியிடப்படுகின்றன.
சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் (ரூ.300) 24-ந்தேதி காலை 10 மணியளவில் வெளியிடப்படுகின்றன.
திருமலை, திருப்பதியில் ஜனவரி மாதத்துக்கான அறைகள் ஒதுக்கீடு 24-ந்தேதி மாலை 3 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படும்.
https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.