ஏற்காட்டில் கோடை விழாவை முன்னிட்டு 15 ஆயிரம் பூந்தொட்டிகள் பராமரிப்பு பணி மும்முரம்

1 week ago 4

சேலம் : ஏற்காட்டில் கோடை விழாவை முன்னிட்டு ரோஸ் கார்டனில் தோட்டக்கலைத்துறை மூலம் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூந்தொட்டிகள் பராமரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மலைகளின் அரசன் என்று அழைக்கப்படுவது ஏற்காடாகும். இங்கு கோடைக்காலத்தில் தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும், இதைதவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

ஏற்காட்டில் பத்துக்கும் மேற்பட்ட இடங்கள் சுற்றி பார்க்க வேண்டிய இடங்களாகும். ஒவ்வொரு ஆண்டும் ஏற்காட்டில் மே மாதம் நான்காவது வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்தில் கோடை விழா கொண்டாடப்படும்.

இவ்விழா பத்து நாட்களுக்கு மேலாக கொண்டாடப்படும். விழாவின்போது அண்ணா பூங்காவில் பல லட்சம் மலர்களால் பொம்மை உருவங்கள், பூந்தொட்டிகள் அலங்காரமாக வைக்கப்படும். இதேபோல் ஏற்காட்டில் விளைவிக்கப்படும் பழவகைகள் காட்சிப்படுத்தி சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக வைக்கப்படும். ஏற்காடு கோடை விழாவிற்கு இன்னும் 50 நாட்களே இருக்கும்பட்சத்தில் ரோஸ் கார்டனில் தோட்டக்கலைத்துறை மூலம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூந்ெதாட்டில்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த பூந்தொட்டிகளில் ஏற்காட்டில் பூக்கும் பூச்செடிகள், மற்ற மலைப்பகுதியில் பூக்கும் பூச்செடிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட வகை பூச்செடிகள் பராமரிக்கப்படுகிறது. பூந்தொட்டிகளுக்கு அங்குள்ள பணியாளர்கள் தினசரி தண்ணீர் விட்டு பராமரித்து வருகின்றனர். இவ்வாறு பராமரிக்கப்படும் பூந்தொட்டிகள் கோடை விழாவின் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஏற்காட்டில் கோடை விழாவை முன்னிட்டு 15 ஆயிரம் பூந்தொட்டிகள் பராமரிப்பு பணி மும்முரம் appeared first on Dinakaran.

Read Entire Article