ஏற்காட்டில் உற்பத்தியாகி காவிரியில் கலக்கும் திருமணிமுத்தாற்றை மீட்டெடுக்க எதிர்பார்ப்பு: தூர்வாரி, சாயக்கழிவு கலக்காமல் செய்தால் போதும்

3 months ago 20

சேலம்:சேலத்தின் வரலாற்று பெயர் சைலம். சைலம் என்றால் மலைகள் சேர்ந்த பகுதி. வட மேற்கிற் இருந்து வட கிழக்கு வரை சேர்வராயன் மலை நீள்கிறது. ஆத்தூர் முதல் விழுப்புரம் வரை அதன் வாலை பிடித்து வளர்கிறது கல்வராயன் மலை. தெற்கில் ஜருகுமலை, ஊத்துமலை, நாமமலை, கந்தகிரி மலை இருக்கின்றன. வடக்கில் நகர மலை, பெருமாள் மலைகள் விரிகின்றன. ராசிபுரம் தாண்டிச் சென்றால் கொஞ்சிஅழைக்கிறது கொல்லிமலை.இவை எல்லாம் கிழக்கு தொடர்ச்சி மலைகள் சேலத்தின் நீராதாரம். இந்த மலைகள் தான், ஒரு காலத்தில் இந்த மலைகளில் ஆயிரக்கணக்கான அருவிகள் இருந்தன. சேர்வராயன் மலைகளில் இருந்து வழிந்தோடிய தண்ணீர் திருமணி முத்தாறாக உற்பத்தியாகி சேலம் மாவட்டதிதல் இருந்ததொடர் சங்கிலி ஏரிகளை நிரப்பி காவிரியுடன் கலந்தது. திருமணி முத்தாறு தொன்மையான நதி.

மணிமுத்தா நதி, வீரமணிமுத்தாறு என்றெல்லாம் அழைக்கப்பட்டது. ஒரு காலத்தில் இந்த ஆற்றில் முத்துச்சிப்பிகள் இருந்தன. முத்து எடுக்கப்பட்டது என்பது மக்களின் நம்பிக்கை. பிரசித்தி பெற்ற செவ்வாய்பேட்டை மாரியம்மன் மூக்கில் அணிந்திருக்கும் மூக்குத்தியின் முத்து திருமணி முத்தாற்றில் இருந்து எடுக்கப்பட்டது என்பார்கள். அதன் நதிக்கரை எங்கும் ஏராளமான நந்தவனங்களும் அன்னதான சத்திரங்களும் இருந்தன. சேர்வராயன் மலையின் தெற்கில் ஏற்காடு பிறக்கிறது திருமணி முத்தாறு. அது சேலம் மையமாக உள்ள மாநகரம் வழியாக உத்தமசோழபுரம், ஆட்டையாம்பட்டி, வீரபாண்டி வழியாக 75மைல்கள் ஓடி பரமத்திவேலூர் அருகே காவிரியில் கலக்கிறது. திருமணிமுத்தாற்றின் கரைகள் கனிம வளம் மிக்கவை. இன்றவுளம் அங்கே அள்ள அள்ள குறையாமல் இரும்பு மேக்னசைட் குரோமைட் வெட்டி எடுக்கப்படுகிறது.

திருமணி முத்தாற்று நீர்வளத்தால் கரும்பு, பருத்தி விளைவிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளனர். சேலம் உப்பம், லாடம் போன்ற பருத்தி வகைகள் உலக பிரசித்தி பெற்றவை. இங்கு நெய்த பருத்தி ஆடைகள் மற்றும் குளிர்கால ஜமுக்காளங்கள் ஜப்பான், சீனா, அமெரிக்கா, நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ராசிபுரம் செல்லமும், நெய்யும் இலங்கைக்கு சென்றன. இப்படி மக்களை வாழ்வாங்கு வாழ்வித்த திருமணிமுத்தாறு இன்று இல்லை. மகாநதியாக விளங்கிய திருமணிமுத்தாறு அதன் தன்மையை இழந்து வருகிறது. சேலம் மாநகரின் மையப்பகுதியில் செல்லும் திருமணி மணிமுத்தாறு சீரமைப்பு திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது அந்த திட்டம் அப்படியே முடங்கிகிடக்கிறது. மையப்பகுதி வழியாக செல்லும் திருமணி முத்தாற்றில், கட்டிட கழிவுகள், முட்புதர் மண்டி சாக்கடை கழிவு நீர் செல்கிறது.

இதை கழிவுகளை அகற்றவேண்டும் எனவும், திருமணிமுத்தாறு மறு சீரமைப்பு செய்யவேண்டும் எனவும் பொதுமக்கள் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், திருமணிமுத்தாற்றில் தூர்வாரப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திருமணிமுத்தாற்றில் சாயப்பட்டறை கழிவுநீர், நுரை பொங்கி செல்கிறது. இதனால் அந்த பகுதியில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். அந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல், கரும்பு உள்ளிட்ட விவசாயம் செய்து வருவதாகவும், கழிவு நீர் கலந்து செல்வதால், நுரை பொங்கி வருவதால் தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். திருமணிமுத்தாற்றில் சாய கழிவுநீரை கலப்பதை தடுக்க மாசுகட்டுப்பாடு வாரியம் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். அப்போது தான் அதனை தடுக்க முடியும்.

மழை காலங்களில் தண்ணீர் அதிகமாக செல்லும் போது கழிவுநீர் வெளியேற்றுவதையும் தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையே, திருமணிமுத்தாற்றை மீட்டெக்கும் வகையில் சன்னியாசிகள் சங்கத்தினர் கடந்த 12 நாட்களாக சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் பின்புறம் நதியின் கரையில் ஆரத்தி எடுத்தனர். அப்போது இந்த நதி தூய்மையான நதியாக மாறும் என நம்பிக்கை தெரிவித்தனர். திருமணிமுத்தாற்றை மீட்டெடுக்க ஒன்றிய, மாநில அரசுக்கள் உரிய நிதியை ஒதுக்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘திருமணிமுத்தாற்றில் உள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குகை பகுதிவழியாக செல்லும் திருமணி முத்தாற்றில் முட்புதர்கள் அகற்றப்படும். கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க கண்காணிக்கப்படும். மேலும் அரசின் சிறப்பு நிதி கிடைத்தால் திருமணிமுத்தாறு சிறப்பாக சீரமைக்க வாய்ப்பு உள்ளது,’’ என்றனர்.

ஆங்கிலேயர் ஒதுக்கிய நிதி
அன்றைய திருமணி முத்தாற்றில் குகை வாய்க்கால், பஞ்சந்தாங்கி ஏரி வாய்க்கால், சக்கிலி ஏரி வாய்க்கால், மூக்கனேரி வாய்க்கால் தாதுபாய்குட்டை வாய்க்கால், வெள்ளக்குட்டை வாய்க்கால்,சீலாவரி வாய்க்கால் என 8 வாய்க்கால்கள் இருந்தன. திருமணி முத்தாற்றின் வடிநிலப்பரப்பு 717 சதுர மைல் பரப்பளவை கொண்டது. 290 சங்கிலி தொடர் ஏரிகளை திருமணி முத்தாறு நிரப்பியது. 1889ம் ஆண்டில் இந்த நீர் நிலைகளை மேம்படுத்த ₹1,07,568 ஒதுக்கப்பட்டது. இந்த விவரங்கள் எல்லாம் ஆங்கிலேயரின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ஏற்காட்டில் உற்பத்தியாகி காவிரியில் கலக்கும் திருமணிமுத்தாற்றை மீட்டெடுக்க எதிர்பார்ப்பு: தூர்வாரி, சாயக்கழிவு கலக்காமல் செய்தால் போதும் appeared first on Dinakaran.

Read Entire Article