ஏற்காடு மலைப்பாதையில் சுழலும் ரப்பர் தடுப்பு உருளைகளை மே மாதத்திற்குள் முடிக்க நடவடிக்கை: நேரில் ஆய்வு செய்து அமைச்சர் தகவல்

2 weeks ago 2

ேசலம், ஜன. 22: ஏற்காடு மலைப்பாதையில் நடந்து வரும் சுழலும் ரப்பர் தடுப்பு உருளைகள் அமைக்கும் பணிகள், மே மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும் என அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார். சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில், விபத்துகளை தடுக்கும் வகையில், சாலையோர சுழலும் ரப்பர் தடுப்பு உருளைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உருளைகள்அமைப்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், விரைவில் பணிகளை நிறைவு செய்ய அறிவுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜேந்திரன் கூறியதாவது: சேலம்-ஏற்காடு பிரதான மலைப்பாதையில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. மலைப்பாதையில் விபத்துகளை தடுக்கும் வகையில் முதற்கட்டமாக நெடுஞ்சாலைத்துறை சார்பில், 8 இடங்களில், ₹4 கோடி மதிப்பில், 557 மீட்டர் நீளத்திற்கு ரோலர் க்ராஷ் பேரியர் எனப்படும், சுழலும் ரப்பர் தடுப்பு உருளைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது வரை இப்பணிகள் 50 சதவீதம் முடிவுற்றுள்ளது. இதேபோன்று, அடுத்தகட்டமாக, குப்பனூரிலிருந்து ஏற்காடு வரும் சாலையில் 8 இடங்களிலும், மற்றும் பெலாத்தூர்-குப்பனூர் சாலையில் 8 இடங்களிலும் தலா ₹3 கோடி மதிப்பில் 418 மீட்டர் நீளத்திற்கு இந்த சுழலும் ரப்பர் தடுப்பு அமைக்கப்படவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காக மொத்தம் ₹10 கோடி மதிப்பீட்டில் சுழலும் ரப்பர் தடுப்புகள் அமைக்கப்படுகிறது. இதுபோன்ற தடுப்புகள் சுழலக்கூடிய ரப்பர் வளையங்களைக் கொண்டது. இதன் மீது வாகனங்கள் மோதும்போது, மோதலின் வேகம் குறைக்கப்படுவதுடன், மோதும் வாகனம் பின்நோக்கி உந்தப்படுவதால் வாகனம் மீண்டும் சாலைக்குள்ளேயே சென்றுவிடும் என்பதால் விபத்தின் தாக்கம் குறைக்கப்படுகிறது.

அதேபோன்று, ஏற்காட்டில் பல்வேறு சாலை சீரமைப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் வருகின்ற மே மாதத்திற்குள் முடிக்கப்படும். அத்துடன், சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் ஏற்காடு ஏரியில் மிதக்கும் படகு உணவகம் தொடங்க ஏதுவாக ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) லலித்ஆதித்ய நீலம், ஆர்டிஓ அபிநயா, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் சிவசெல்வி, உதவி பொறியாளர் சுமதி உள்ளிட்ட மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post ஏற்காடு மலைப்பாதையில் சுழலும் ரப்பர் தடுப்பு உருளைகளை மே மாதத்திற்குள் முடிக்க நடவடிக்கை: நேரில் ஆய்வு செய்து அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article