திண்டிவனம், அக். 24: கல்பாக்கம் ஏரி மீன்களை ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து மேல்மாவிலங்கை ஊராட்சி மன்ற அலுவலகத்ைத பொதுமக்கள் முற்றுகையிட்டனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மேல்மாவிலங்கை ஊராட்சிக்கு உட்பட்ட மேல்மாவிலங்கை, கல்பாக்கம் கிராமம். மேல்மாவிலங்கை ஊராட்சி மன்ற தலைவர் செங்கேணி கல்பாக்கத்தில் உள்ள ஏரியில் உள்ள மரங்கள் மற்றும் மீன்களை ஏலம் விடப்போவதாக நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டர். இதனையறிந்த பொதுமக்கள் ஊராட்சி தலைவரின் அறிவிப்பு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளித்தனர். எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று அறிவித்தபடி ஏலம் நடந்தது.
ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏலம் விடுவதை தடுத்து நிறுத்தி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். பின்னர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நூர்ஜகான், வி.ஏ.ஓ. மதி உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அப்போது புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலை பணிக்காக அனுமதி இன்றி மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதை கண்டித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
The post ஏரி மீன்களை ஏலம் விட எதிர்ப்பு மேல்மாவிலங்கை ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம்- பரபரப்பு appeared first on Dinakaran.