ஏமாற்றுபவன் என்னைச் சேர்ந்தவனல்லன்

3 months ago 20

கொடுக்கல், வாங்கலில் நாணயமில்லை என்பது இன்று மலிந்து காணப்படுகின்றது. வியாபாரிகள் மக்களை ஏமாற்றுவது இன்று சர்வ சாதாரண நிகழ்வாகிவிட்டது. பாலில் தண்ணீர் கலப்பது தொன்று தொட்டு வரும் பழக்கம். நறுமணப் பொருட்களில் குதிரைச் சாணத்தைக் கலப்பது நவீனக் கலப்படம்! காபித் தூளில் புளியங்கொட்டைத் தூள், மிளகாய்த் தூளில் செங்கல் பொடி, மிளகில் பப்பாளி விதை, அரிசியில் பொடிக் கற்கள் என விதவிதமாய், வகை வகையாய்க் கலப்படங்கள். உணவு தானியங்களிலும் மாவுப் பொருட்களிலும், குழந்தைகளின் பால் பவுடரிலும்கூட படுபாவிகள் நச்சுப் பொருட்களை கலந்து விடுகிறார்கள். சந்தையில் விற்கப்படும் போலி மருந்துகளுக்குக் கணக்கு வழக்கே இல்லை. மக்களுடைய உடல்நலனுக்கும் உயிருக்கும் ஏற்படும் ஆபத்து பற்றி இதில் ஈடுபடுபவர்கள் சிந்திப்பதே இல்லை.

அதுபோலத்தான் பதுக்கலும்!
அன்றாடம் தேவைப்படும் பொருள்களை பெரிய வணிகர்கள் பெரிய அளவில் வாங்கிப் பதுக்கி வைத்து செயற்கையான பற்றாக்குறையை ஏற்படுத்துகிறார்கள். இதன் காரணமாக, தாறுமாறாக விலைவாசிகள் ஏறுகின்றன. மக்களைக் கசக்கிப் பிழிந்து கொள்ளை லாபம் அடிக்கிறார்கள். பதுக்கல் வியாபாரிகள் வைத்ததுதான் விலை என்றாகிவிட்டது.

இவ்வாறு கலப்படம் செய்பவர்களையும் பதுக்கல் செய்பவர்களையும் ‘சாபத்திற்குரியவர்கள்’ என்று இஸ்லாமியத் திருநெறி கூறுகிறது. ஏனெனில் இவர்கள் மக்களுக்குத் துன்பம் அளிக்கிறார்கள். சுரண்டுகிறார்கள். மக்களின் இயலாமையைப் பயன்படுத்திக்கொண்டு சுயலாபம் தேடுகிறார்கள்.

சரக்குகளை பதுக்குவதை விட்டொழித்து அவற்றை விற்பனைக்காகக் கடைத்தெருவுக்குக் கொண்டு வரும் படி இஸ்லாம் அறிவுறுத்துகிறது. அப்படிப்பட்ட நேர்மையான வணிகர்களை இறையருளுக்குரியவர்கள் என்று இஸ்லாம் கூறுகிறது. இறைநெறியின் இந்த போதனையை வணிகர்கள் பின்பற்றுவார்களேயானால் விலைவாசிகள் கட்டாயமாக ஒரு வரம்புக்குள் இருக்கும். மேலும், கறுப்புச் சந்தைகளும் சுரண்டல்களும் தானாகவே ஒழியும்.

‘‘எவன் ஏமாற்றுகிறானோ அவன் என்னைச் சேர்ந்தவனல்லன்.’’
‘‘பதுக்கல் செய்பவன் பாவியாவான்.’’
‘‘விற்பதற்காக வெளியிலிருந்து சரக்கைக் கொண்டு வருபவன் (இறையருளுக்குரியவன்; அவன்) உணவு அளிக்கப்படுவான். பதுக்குபவன் பாவியாவான்.’’
பாதகர்கள் செவிகளில் இந்த நல்லுரைகள் விழுமா?

– சிராஜுல் ஹஸன்.

இந்த வாரச் சிந்தனை

‘‘இறைவா, நான் அறிந்தோ அறியாமலோ செய்த தவறுகளை மன்னிப்பாயாக. இறைவா, நான் நற்செயல்கள் புரியவும் நல்லொழுக்கத்தோடு வாழவும் அருள் புரிவாயாக.’’ (முஸ்லிம்)

The post ஏமாற்றுபவன் என்னைச் சேர்ந்தவனல்லன் appeared first on Dinakaran.

Read Entire Article