ஏப்ரல் 7ம் தேதி கும்பாபிஷேகம் தென்காசி காசி விசுவநாதர் கோயிலில் இரவு, பகலாக திருப்பணிகள் தீவிரம்: கலெக்டர், எஸ்பி பார்வையிட்டு பணியை துரிதப்படுத்தினர்

1 day ago 2

தென்காசி, ஏப்.2: தென்காசி காசி விசுவநாதர் கோயிலில் வரும் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் நேற்று கலெக்டர், எஸ்.பி. மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

தென்காசி காசி விசுவநாதர் கோயில் மிகவும் பழமையும் பெருமையும் வாய்ந்த சிவன் கோயில் ஆகும். 15ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான இந்த கோயிலில் ஒன்பதாவது கும்பாபிஷேகம் இம்மாதம் 7ம் தேதி நடக்கிறது. இதற்காக திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவோடு இரவாக கோயிலுக்கும் ரதவீதி பகுதிக்கும் நடுவில் இருந்த மண் தரையானது சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டு அழகு படுத்தப்பட்டது. ராஜகோபுரம் சீரமைக்கும் பணி வர்ணம் பூசும் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. அதேபோன்று சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி, பாலமுருகன் சன்னதி, மற்றும் பஞ்சமூர்த்தி சன்னதிகளில் உள்ள கோபுரங்களும் வர்ணம் தீட்டப்பட்டு செம்பினால் ஆன கலசங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

ராஜகோபுரத்தில் 11 செம்பு கலசங்கள் பொருத்தப்பட்டுள்ளது. அம்மன் சன்னதியில் மூன்று கலசங்கள் பொருத்தப்பட்டுள்ளது. சுவாமி சன்னதி மற்றும் பாலமுருகர் சன்னதியில் தலா ஒரு கலசம் பொருத்தப்பட்டுள்ளது. கலசங்களுக்கு கும்பாபிஷேக தினத்தன்று அபிஷேகம் செய்யும் வகையிலும் பட்டர்கள் உள்ளிட்டோர் செல்லும் வகையில் இரும்பு படிக்கட்டுகள் மூலம் சாரம் அமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. ஒரே சமயத்தில் நான்கு பேர் வரை படியேறி செல்லும் வகையில் அகலமாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது. ஏறுவதற்கு ஒரு இடத்திலும் இறங்குவதற்கு மற்றொரு இடத்திலும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முறை கும்பாபிஷேக திருப்பணிகளில் கடந்த காலங்களில் இல்லாத சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதுவரை கோயிலில் துர்க்கை அம்மன் சன்னதி உள்ளிட்ட சில இடங்களில் தரையில் வைத்து விளக்கு ஏற்றுவது வழக்கம். இதனால் தரை முழுவதும் எண்ணெய் கொட்டி காணப்பட்டது.

தற்போது கோயில் நிர்வாக அதிகாரி பொன்னியின் ஏற்பாட்டில் சுமார் 3 அடி உயரத்தில் பீடங்கள் அமைக்கப்பட்டு அவற்றில் தகடுகளால் ஆன தட்டு வைக்கப்பட்டு அகல் விளக்குகளை அதில் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று பைரவர் சன்னதி சில அடி உயர மண் மேடுகளில் அஸ்திவாரம் புதைந்து காணப்பட்டது. அதனை சரி செய்ததுடன் பைரவர் சன்னதியின் மட்டத்திற்கு கோயில் பிரகாரத்தில் உள்ள மண் முழுவதும் அள்ளப்பட்டது. இதன் மூலம் சுற்று பிரகார இடத்தை விட கோயிலின் தரைத்தளம் சற்று உயர்த்தப்பட்டது. இதன் மூலம் மழை காலங்களில் தண்ணீர் கோயில் மண்டப தளங்களுக்குள் புகுந்து விடாதவாறு தடுக்கப்பட்டுள்ளது. மேலும் மழை நீரானது இலகுவாக பிரகாரங்களில் உள்ள கழிவு நீரோடைகள் வழியாக வெளியேறும் வகையில் தளத்தின் உயரத்தை தனித்து நான்கு புறமும் ஒரே மட்டத்தில் இருக்கும் அளவிற்கு சமப்படுத்தப்பட்டுள்ளது. கோயிலின் மதில் சுவருக்கு வெளிப்பகுதியில் உள்ள மாடவீதி புதர்கள் மற்றும் கட்டிடங்கள் நிறைந்து ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. தற்போது அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு புதர்கள் அப்புறப்படுத்தப்பட்டு முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

பாலமுருகன் சன்னதியில் தூண்களுக்கு மத்தியில் சுவர்கள் கட்டப்பட்டு போதிய வெளிச்சம் இன்றி இருட்டாகவும் பராமரிப்பு இல்லாமலும் காணப்பட்டது. தற்போது தூண்களுக்கு இடைப்பட்ட செங்கற்களால் ஆன சுவர்கள் எடுக்கப்பட்டு தூண்கள் உபயதாரர் பங்களிப்புடன் உறுதிப்படுத்தப்பட்டு வயதானவர்கள் அமரும் வகையில் உயரம் குறைவான தடுப்பு சுவர்கள் கட்டப்படுவதுடன், பாலமுருகன் சன்னதி, அம்மன் சன்னதி ஆகியவற்றை எங்கிருந்தும் பார்க்க முடியும் என்கிற அளவிலும் இயற்கையான வெளிச்சமும் காற்றோட்டமும் கிடைக்கின்ற வகையில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

கோயிலின் பிரகாரத்தில் 63 நாயன்மார்களின் சிலைகள் ஏற்கனவே இருந்தது. ஒவ்வொரு நாயன்மாருக்கும் அவர்கள் பிறந்த மாதம், பிறந்த நட்சத்திரம் ஆகியவற்றை கிரானைட் கற்களில் செதுக்கி சிலைகளுக்கு அருகில் பதிக்கப்பட்டுள்ளது பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அங்கு வருகை தரும் பக்தர்கள் தங்களது நட்சத்திரங்களுடன் நாயன்மார்களின் நட்சத்திரத்தை பொருத்திப் பார்த்து செல்கின்றனர். யாகசாலை பணிகள் கிட்டத்தட்ட நிறைவு கட்டத்தை எட்டிவிட்டது.

பக்தர்கள், ஆன்மீகப்பெரியவர்கள், சமுதாய நிர்வாகிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் அறங்காவலர் குழுவை அணுகி கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்துவதற்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். சிவனடியார்கள் சிவ பக்தர்களின் உழைப்பும் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது ஆகும்.

The post ஏப்ரல் 7ம் தேதி கும்பாபிஷேகம் தென்காசி காசி விசுவநாதர் கோயிலில் இரவு, பகலாக திருப்பணிகள் தீவிரம்: கலெக்டர், எஸ்பி பார்வையிட்டு பணியை துரிதப்படுத்தினர் appeared first on Dinakaran.

Read Entire Article