சென்னை,
தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், கட்சியின் முதல் மாநாட்டை வரும் 27 ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளார். மாநாட்டிற்கான பந்தல் கால் நட்டப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளது. விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
மாநாடு நடைபெறும் இடத்தை சமன்படுத்தும் பணி தற்போது தொடங்கியுள்ளது. 50 அடி உயரம் 800 அடி அகலத்தில் செயின் ஜார்ஜ் கோட்டை போன்ற முகப்பு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்ள கட்சி தொண்டர்களுக்கு நடிகர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். நடிகர் விஜய் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வி.சாலை எனும் வெற்றி சாலையில் சந்திப்போம். மாநாடு தொடங்கி முடியும் வரை ராணுவ கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா என சிலர் கேள்விக் கணைகளை வீசுகிறார்கள். மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் போதுதான் அவர்களுக்கு என்னவென்று தெரியும்.
தவெக மற்ற கட்சிகளை போல சாதாரண இயக்கம் அல்ல.ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி இல்லை என்பதை மாநாடு மூலம் நிரூபிப்போம். வீறு கொண்டு எழுந்து அரசியல் களத்தில் வெற்றி காணப்போகிற கட்சி என்பதை இனிமேல் புரிந்து கொள்வர். மக்கள் இயக்கமாக இருந்த நாம் மக்களோடு மக்களாக களமாடி அரசியல் உரிமைகளை வென்றெடுக்க போகிறோம். தவெகவின் முதல் மாநாடு என்பது நம் அரசியல் கொள்கை பிரகடன மாநாடு. பொறுப்பான மனிதனைத்தான் குடும்பம் மதிக்கும். பொறுப்பான. மக்கள் இயக்கமாக இருந்த நாம் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் இயக்கமாக மாறிவிட்டோம். மக்களுக்கு இன்னமும் முழுமை பெறாத அடிப்படை தேவைகளை நிரந்தரமாக பூர்த்தி செய்ய வேண்டும். என் நெஞ்சில் நீண்ட காலமாக அணையாமல் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே இருக்கும் லட்சியக் கனல் இதுதான்" என்று தெரிவித்துள்ளார்.