ஏடிஎம் மையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு

3 months ago 25

நாமக்கல், செப்.30: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் மையங்களில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பழுதான சிசிடிவி கேமராக்களை மாற்ற வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் ஏடிஎம் மையங்களில் ₹67 லட்சத்தை கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்கள் கடந்த 27ம் தேதி காலை கன்டெய்னர் லாரி மூலம் நாமக்கல் மாவட்டம் வழியாக தப்பி செல்ல முயன்றனர்.

இது பற்றி கேரளா மாநில காவல்துறையினர், நாமக்கல் மாவட்ட காவல்துறைக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்ததால், குமாரபாளையம் அருகே நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணன் தலைமையிலான போலீசார் கொள்ளையர்கள் வந்த கன்டெய்னர் லாரியை மடக்கினர். அப்போது தப்பி ஓட முயன்ற ஒரு கொள்ளையனை போலீசார் சுட்டு கொன்றனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். 5 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் மையங்களில் காவல்துறையினர் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் அனைத்து வங்கிகளின் சார்பில் 300க்கும் மேற்பட்ட ஏடிம் சென்டர்கள் உள்ளன. இதில் பெரும்பாலான மையங்கள் பஸ் நிலையம், பிரதான சாலைகள், கல்லூரிகள், தனியார் பள்ளிகளில் உள்ளது.

மேலும் இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத சாலைகளில் உள்ள ஏடிஎம்களை தீவிரமாக கண்காணிக்கும்படி மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணன் போலீசாரை அறிவுறுத்தியுள்ளார். இதன் காரணமாக தற்போது இரவு நேரங்களில் அந்தந்த காவல்நிலையங்களுக்கு உட்பட்ட ஏடிஎம்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், மாவட்ட எஸ்பியின் உத்தரவை, மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுளள்ளது. பெரும்பாலான ஏடிஎம்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் இரவு நேர காவலாளியாக இருக்கிறார்கள்.

அவர்களை மாற்றி புதிய நபர்களை நன்கு விசாரித்து பணிக்கு எடுக்கும்படி வங்கி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து ஏடிஎம் சென்டர்களிலும் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அலாரம் வசதி போன்றவை நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரவுநேர ரோந்து பணியின் போது இது தொடர்பாக ஏடிஎம் சென்டர்களில் ஆய்வு செய்து குறைபாடுகள் காணப்படும் ஏடிஎம் சென்டர்களின் வங்கி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. வடமாநில ஏடிஎம் கொள்ளையர்கள் குறிப்பிட்ட சில ஏடிஎம் சென்டர்களை தான் தேர்வு செய்து கொள்ளையடித்து வருகிறார்கள்.

எனவே அந்த வங்கியின் ஏடிஎம் சென்டர்கள் மாவட்டத்தில் அமைந்துள்ள பகுதிகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். கொள்ளையர்கள் ஏடிஎம் மையங்களை முன்கூட்டியே தேர்வு செய்து தான் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். எனவே ஏடிஎம் மையங்களின் சந்தேகம் அளிக்கும் வகையில் நிற்கும் கார்கள், நபர்கள் குறித்து பொதுமக்கள் அருகில் உள்ள காவல்நிலையங்களுக்கு தகவல் அளிக்கவேண்டும். இவ்வாறு அவர்கள்
தெரிவித்தனர்.

The post ஏடிஎம் மையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article