டெல்லி : நாடு முழுவதும் ஏடிஎம் இயந்திரங்கள் மூடப்படும் என்று சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் வதந்தி என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் இயங்கும் ஏடிஎம் இயந்திரங்கள் 2 அல்லது 3 நாட்களுக்குள் மூடப்படும் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வந்தது. இந்த தகவல் பொய்யானது என Press Information Bureau Fact Check உறுதி செய்துள்ளது. வழக்கம் போல் ஏடிஎம் மையங்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஏடிஎம் இயந்திரங்கள் இயங்காது என சமூகவலைதளங்களில் பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருவதால் பயனர்கள் மிகுந்த கவலையில் உள்ளதாக Press Information Bureau தெரிவித்துள்ளது. சமூகவலைதளங்களில் பரவும் வதந்தியை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் எந்த ஒரு தகவலையும் சரிபார்க்காமல், அதனை பரப்ப வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே போதுமான அளவிற்கு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் எனவே வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப மக்கள் அவசரம் காட்ட வேண்டாம் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், நாடு முழுவதும் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் அதன் செயல்பாடு வழித்தடங்கள் சீராக இயக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது. எனவே மக்கள் அச்சம் அடைந்து எரிபொருள் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் எரிபொருள், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் என தங்கள் நிறுவனத்தின் அனைத்து விற்பனை நிலையங்களிலும் உடனடியாகக் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அமைதியுடன் இருக்கவும், தேவையற்ற அவசரத்தைத் தவிர்த்து, தங்களின் சேவையை தொடர உதவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் தங்கள் நிறுவனத்தின் விநியோக வழித்தடங்களை தடையின்றி இயங்கவும், அனைவருக்கும் தடையற்ற எரிபொருள் வழங்கலை உறுதி செய்யவும் உதவும் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
The post ஏடிஎம்-கள் மூடப்படும் என்பது வதந்தியே என ஒன்றிய அரசு தகவல்.. போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்!! appeared first on Dinakaran.