ஏசி பெட்டிகளுடன் மின்சார ரயில் ஜனவரியில் பயன்பாட்டிற்கு வருகிறது

4 weeks ago 7


சென்னை: புறநகர் மின்சார ரயில்களில் ஏசி வசதி கொண்ட ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகள் மத்தியில் நீண்ட நாட்களாக முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், வரும் ஜனவரி மாதத்தில் இருந்து ஏசி மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னைக்குள் பல்வேறு காரணங்களுக்கு வந்து செல்கிறார்கள். இவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருப்பது புறநகர் மின்சார ரயில்கள்தான். சென்னையில் ஆவடி- சென்ட்ரல், கடற்கரை – வேளச்சேரி, கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில்தான் அதிக ரயில்கள் இயக்கப்படுகின்றன.

கிண்டி, மாம்பலம், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக இந்த ரயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் கூட்டம் எப்போதும் அலை மோதும். சில நிமிடங்கள் ரயில்கள் தாமதம் ஆனால் கூட ரயில் நிலையத்தில் எதோ திருவிழா கூட்டம் போல எங்கு பார்த்தாலும் பயணிகள் கூட்டம் அலைமோதும். அந்த அளவுக்கு சென்னை சிட்டிக்குள் மிக முக்கிய ரூட்டாக இது உள்ளது. புறநகர் ரயில்களில் பயணிகளின் வசதியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக புறநகர் மின்சார ரயில்களில் ஏசி வசதி கொண்ட ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகள் மத்தியில் நீண்ட நாட்களாக முன்வைக்கப்பட்டு வருகிறது. புறநகர் மின்சார ரயில்களில் அலுவலகம் செல்வோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயணிப்பதால் ஏசி வசதி கொண்ட ரயில்கள் இயக்கினால் எந்த களைப்பும் இல்லாமல், எளிதாக பயணிக்க முடியும் என்பதும், பயணிகள் ஏசி வசதி கொண்ட மின்சார ரயில்கள் எப்போது இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

ஏசி கோச்கள் கொண்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி சென்னை ஐசிஎப்பில் நடைபெற்றது. இதற்கான பணி முடிவடைந்துள்ள நிலையில், வரும் ஜனவரி முதல் மின்சார ஏசி ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். 12 பெட்டிகள் கொண்ட இந்த ஏசி மின்சார ரயில்கள், சென்னை – செங்கல்பட்டு, மூர் மார்க்கெட் – ஆவடி, அரக்கோணம், கும்ம்டிப்பூண்டி ஆகிய ரூட்களில் இயக்கப்பட உள்ளதாக சென்னை பிராந்திய மேலாளர் (டிஆர்.எம்) தெரிவித்துளளார். வேளச்சேரி – கடற்கரை ரூட்டில் மட்டும் ஏசி ரயில்கள் இயக்கப்படாது எனவும், ஏனெனில் இந்த வழித்தடத்தில் 9 பெட்டிகள் கொண்ட ரயில்கள் மட்டுமே இயக்கும் வசதி இருப்பதாகவும் கூறினார். இந்த ரயில்களில் கட்டணம் என்று பார்த்தால், 10 கி.மீ வரை ₹29 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல ஏசி புறநகர் ரயிலில் 11-15 கி.மீ தொலைவுக்கு ₹37 கட்டணமாகவும், 16-25 கி.மீ தொலைவுக்கு ₹65 கட்டணமாக நிர்ணயிக்கப்படும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

The post ஏசி பெட்டிகளுடன் மின்சார ரயில் ஜனவரியில் பயன்பாட்டிற்கு வருகிறது appeared first on Dinakaran.

Read Entire Article