
பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பிரியமான நாள் ஏகாதசி. எனவே, பகவானின் அருளை பெற, அன்றைய தினம் விரதம் இருந்து வழிபடுவது வழக்கமாக உள்ளது. ஏகாதசி விரதம் இருப்பதால் மற்ற அனைத்து விரதங்களின் பலனையும் அடையலாம் என்பது நம்பிக்கை.
அமாவாசையிலிருந்தும், பவுர்ணமியிலிருந்தும் பத்தாவது நாள் தசமி. அதற்கடுத்த நாள் ஏகாதசி. ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி. ஏகாதசி விரதமிருப்பவர்கள், அதற்கு முன் தினமான தசமியன்று, ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு, ஏகாதசியன்று முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். ஏகாதசியன்று இறைவனுக்கு நைவேத்தியமாக படைத்த பிரசாதங்கள் கிடைத்தால்கூட சாப்பிடக்கூடாது என்று புராணங்கள் கூறுகின்றன. முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள் தானிய உணவு வகைகளை மட்டும் தவிர்த்து விரதம் மேற்கொள்ளலாம்.
ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று, அதிகாலையில் எழுந்து நீராடி, இறைவனை வணங்கி துளசி தீர்த்தம் அருந்தி, சூரிய உதயத்திற்கு முன் பாரணை (விரதத்தை உணவு உட்கொண்டு முடித்து கொள்வது) செய்ய வேண்டும். பாரணையில், அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் போன்றவைகளுடன் நல்ல காய்கறிகளையும் சேர்த்து, உணவு சமைக்க வேண்டும். பாரணையை முடித்த பின், அன்று முழுவதும் உறங்கக் கூடாது.
ஏகாதசியன்று, எக்காரணத்தைக் கொண்டும், துளசி இலையை பறிக்கக்கூடாது. எனவே, தேவையான துளசி இலையை, முன்தினமே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த விரதத்தை மேற்கொண்டு தேவர்களும், முனிவர்களும் திருமாலின் அருளைப் பெற்றனர். சகல சௌபாக்கியங்களோடு உடல் ஆரோக்கியமும் கிடைக்கும். சிவபெருமானே பார்வதி தேவிக்கு இவ்விரதத்தின் மகிமை பற்றி கூறியிருக்கிறார் என்றால், அதைவிட வேறு சிறப்பு இல்லை. கிருஷ்ண பட்சத்தில் வரும் உற்பத்தி ஏகாதசியைப் போல, சுக்ல பட்சத்தில் வரும் மற்றொரு ஏகாதசி, "மோட்ச ஏகாதசி" என்றும் அழைப்பார்கள்.
வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருந்தால் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பதும், அன்று இயற்கை மரணமடைந்தவர்கள் வைகுண்டம் செல்வார்கள் என்பதும் நம்பிக்கை. பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் எனப்படும் கதவுகள் திறக்கப்படும். அதன் வழியாக ஆலயத்திற்குள் சென்று பெருமாளை வழிபட வேண்டும்.