
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஏ.ஆர். ரகுமானுக்கு இன்று காலையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. அவர் விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஏ.ஆர். ரகுமான் விரைந்து நலம் பெற விழைகிறேன் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சார் விரைந்து பூரண நலம் பெற்று இல்லம் திரும்பிட விழைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.