சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த விவகாரம் தொடர்பாக சென்னை மண்ணடியில் இயங்கி வரும் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஸி உள்ளார். இவர் மீது சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி எம்.கே.பைஸி வசித்து வரும் கேரளா மாநிலத்தில் உள்ள அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் வழக்கு தொடர்பாக சில ஆவணங்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. பிறகு சோதனையில் கிடைத்த ஆவணங்கள் படி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த வாரம் டெல்லி விமான நிலையத்தில் எம்.கே.பைஸியை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். தேசிய தலைவர் கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் சார்பில் நாடு முழுவதும் அமலாக்கத்துறைக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சென்னை மண்ணடியில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைமை அலுவலகம், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கட்சி அலுவலகம், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள அலுவலகம், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அலுவலகம் என நாடு முழுவதும் 12 மாநிலங்களில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
குறிப்பாக சென்னை மண்ணடியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் 5 பேர் கொண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. கட்சியின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்த நிலையில், எஸ்டிபிஐ கட்சியினர் அலுவலகம் முன்பு குவிந்து, சோதனைக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
The post எஸ்டிபிஐ மாநில தலைமை அலுவலகத்தில் ரெய்டு: 12 மாநிலங்களில் நடந்தது appeared first on Dinakaran.