எஸ்ஐ பணிக்கு வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

1 month ago 11

சென்னை: எஸ்ஐ பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை:
தமிழக காவல்துறைக்கு 1299 சார் ஆய்வாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை இன்று தொடங்கியிருக்கிறது. சார் ஆய்வாளர் பணிக்கான ஆள்தேர்வு அறிவிக்கை 10 மாதங்கள் தாமதமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கேற்ப வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டிருந்தால், கடந்த ஜூலை மாதம் 30 வயது நிறைவடைந்திருந்த இளைஞர்கள் ஆள்தேர்வில் பங்கேற்றிருப்பார்கள். அந்த வாய்ப்பை கடந்த ஆண்டு பறித்த தமிழக அரசு, இந்த ஆண்டு வழங்கும் வகையில் வயது வரம்பை குறைந்தது ஓராண்டாவது உயர்த்தியிருக்க வேண்டும்.

அதேபோல், தமிழக காவல்துறையில் கடந்த ஆண்டு திசம்பர் 11ம் தேதி நிலவரப்படி மொத்தம் 2219 காவல் சார்-ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த எண்ணிக்கை இப்போது 2600ஐ தாண்டியிருக்கக்கூடும். 621 சார் ஆய்வாளர்கள் நியமனம் நிலுவையில் இருக்கும் நிலையில், குறைந்தது 2000 சார் ஆய்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், அதில் மூன்றில் ஒரு பங்கு குறைவாக 1299 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இது போதுமானதல்ல.

காவல்துறையின் வலிமையையும், தேர்வர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, சார் ஆய்வாளர் பணிக்கான வயது வரம்பை பொதுப்பிரிவினருக்கு 33 வயது, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 35 வயது, பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு 38 வயதாக உயர்த்த வேண்டும். அதேபோல், தேர்ந்தெடுக்கப்பட உள்ளவர்களின் எண்ணிக்கையை 2000 ஆக உயர்த்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post எஸ்ஐ பணிக்கு வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article