எஸ்ஐ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் இறுதி பட்டியலை வெளியிட்டு பணிஆணை வழங்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

3 hours ago 1

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த 2023ம் ஆண்டு, மே மாதம் 5ம் தேதி, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், காவல்துறை உதவி ஆய்வாளர்கள் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை அறிவித்தது. இதனை அடுத்து, இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் நடைபெற்று, முடிவுகள் வெளியிடப்பட்டன.

இறுதிப் பட்டியலில் தேர்வு பெற்றவர்கள் குறித்த முழு விவரங்களையும் வெளியிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், தொடரப்பட்ட வழக்கில், கடந்த 28.10.2024 அன்று, சென்னை உயர்நீதிமன்றம், காவல் உதவி ஆய்வாளர்கள் பணிக்குத் தேர்ச்சி பெற்றவர்களின், பெயர், பிறந்த தேதி, மதிப்பெண்கள், சமூகப் பிரிவு உள்ளிட்ட 15 விவரங்களையும் இறுதிப் பட்டியலில் வெளியிடுமாறும், அதுவரையிலும், ஏற்கனவே வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட இறுதிப் பட்டியல் நிறுத்தி வைக்கப்படும் என்றும் தீர்ப்பு அளித்தது. ஆனால், 4 மாதங்கள் ஆகியும், இன்று வரை தேர்ச்சி பெற்றவர்களுக்கான முழு விவரங்கள் அடங்கிய இறுதிப் பட்டியல் வெளியிடப்படவில்லை.

சுமார் 2 ஆண்டுகளாக, காவல்துறை பணிக்காகத் தங்களை தயார் செய்து, அனைத்துத் தேர்ச்சி முறைகளிலும் வெற்றி பெற்று, பணி ஆணை பெறக் காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியும், முழு விவரங்கள் அடங்கிய இறுதிப் பட்டியலை வெளியிட அரசு தயங்குவது ஏன்?. எனவே இனியும் காலம் தாமதிக்காமல், காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டு, அவர்களுக்கான பணி ஆணையை வழங்க வேண்டும்.

The post எஸ்ஐ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் இறுதி பட்டியலை வெளியிட்டு பணிஆணை வழங்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article