எவரெஸ்ட் சிகரத்தில் ஏற கட்டணத்தை உயர்த்திய நேபாள அரசு

4 hours ago 1

காத்மண்டு,

உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரம் 8,848.86 மீட்டர் உயரம் கொண்டது. எவரெஸ்ட் மலை உச்சிக்கு சென்று பலர் சாதனை படைத்துள்ளனர். இதில் ஏறுவதற்காக நேபாள அரசு ராயல்டி கட்டணம் வசூலித்து வருகிறது. இந்த ராயல்டி கட்டணம் கடந்த 2015ம் ஆண்டில் திருத்தி அமைக்கப்பட்டது.

இந்தநிலையில், ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் உலகம் முழுவதும் ஏராளமான மலையேற்ற வீரர்கள் நேபாளம் வழியாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுகின்றனர். இந்த சீசனில் ஒரு நபருக்கு ரூ.9.51 லட்சம் கட்டணம் விதிக்கப்பட்டது. தற்போது ஒரு நபருக்கு ரூ.12.96 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது 36 சதவீத கட்டண உயர்வு ஆகும். செப்டம்பர் முதல் நவம்பர் வரை எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏற ரூ.6.48 லட்சமும், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை சிகரத்தில் ஏற ரூ.3.02 லட்சமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

நேபாள நாட்டின் அமைச்சரவை, இந்த கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. இந்த புதிய கட்டண உயர்வு வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அந்நாட்டின் சுற்றுலா வாரியத்தின் இயக்குனர் ஆரத்தி நியூபேன் கூறியுள்ளார்.

Read Entire Article