எழுத்தாளரும், பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் காலமானார் : அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்!!

3 months ago 16

சென்னை: ‘முரசொலி’ நாளிதழின் நிர்வாக ஆசிரியரும், மறைந்த திமுக தலைவர் கலைஞரின் மருமகனுமான செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (அக்.10) காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வைகோ (மதிமுக) – “சட்டக்கல்லூரியில் நான் பயின்று கொண்டிருந்தபோது நடைபெற்ற மாணவர் தேர்தலில் என்னை போட்டியிட வலியுறுத்தி எனக்காக தேர்தல் பணிகளிலும் முழுமையாக முரசொலி செல்வம் ஈடுபட்டதை, இந்த வேளையில் நான் எண்ணிப்பார்க்கிறேன். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என அனைத்து களங்களிலும் திமுக வாகை சூடி வரும் இந்த நேரத்தில், சங்பரிவார் கூட்டத்துக்கு தமிழகத்தில் கடுகளவும் இடமில்லை என்று நாற்பதுக்கு நாற்பது நமது அணி வெற்றிபெற்றுள்ள இந்த நேரத்தில், இமயக் கொடுமுடியான காஷ்மீரத்திலும் நாம் வெற்றியை சந்தித்துள்ள இந்த நேரத்தில் முரசொலி செல்வம் எதிர்பாராத மறைவு நம்மை சோக வெள்ளத்தில் மூழ்கடிக்கச் செய்கிறது,” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) – “முரசொலி நாளிதழில் ஏராளமான அரசியல் கட்டுரைகளை தொடர்ந்து எழுதியவர். மாநில உரிமைகள், கூட்டாட்சி தத்துவம், அரசியலமைப்பு சாசனம் ஆகியவற்றை பாதுகாக்கவும், மதவெறி கொள்கைகளுக்கு எதிராகவும் தனது எழுத்துக்கள் மூலம் உறுதியாக போராடியவர். துணிச்சல்மிக்க எழுத்தாளர், கட்டுரையாளர், அதிர்ந்து பேசாத பண்பாளர். பழகுவதற்கு இனிமையானவர். அவரது மறைவு திமுகவுக்கும், ஜனநாயக இயக்கத்துக்கும், பத்திரிகை உலகுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்,” என தெரிவித்துள்ளார்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) – “முரசொலியின் சார்பில் சிறப்பு மலர்கள் வெளியிடுகின்ற போது, கட்டுரை கேட்டு கடிதம் அனுப்புவது மட்டுமின்றி, தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கட்டுரை கேட்பதும், மீண்டும், மீண்டும் நினைவூட்டி பேசுவதும் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. திமுகவில் மிகுந்த கொள்கை பிடிப்போடு பணியாற்றியவர்.அனைவரிடத்திலும் அன்பொழுக பழகக் கூடிய சிறந்த பண்பாளர். அதிர்ந்து பேசாத தன்னடக்கமிக்கவர்.அவரது எழுத்துப் பணிகள் மரண தருவாயிலும் தொடர்ந்துள்ளது.கட்டுரைகள் எழுத குறிப்புகள் எடுத்து வைத்து விட்டு கண்அயர்ந்த நிலையில் இயற்கை எய்தினார் என்கிற துயரச் செய்தி நம்மை அதிர்ச்சியடைய செய்துள்ளது,” என்று பகிர்ந்துள்ளார்.

எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக) – “தனது எழுத்தில் நகைச்சுவையோடு கொள்கையை பரப்பியவர்.திராவிட சிந்தனையை பரப்புவதில் பெரும் முனைப்பு காட்டியவர். இதழியல் சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டு எதேச்சதிகார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது துணிவோடு சட்டமன்றத்தில் கூண்டில் நின்று நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டவர் எழுத்துத் துறை மட்டுமின்றி திரைத்துறையிலும் தடம் பதித்தவர். அவரைப் பிரிந்து வாடும் தமிழக முதல்வர், அவரது உறவினர்கள், பத்திரிக்கை துறையினருக்கும் திமுக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் (முன்னாள் முதல்வர்): “முரசொலி நாளிதழின் ஆசிரியரும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகனுமான முரசொலி செல்வம் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், பத்திரிக்கை துறையினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார்.

The post எழுத்தாளரும், பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் காலமானார் : அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்!! appeared first on Dinakaran.

Read Entire Article