எள் சாகுபடிக்கு சில பயனுள்ள தகவல்கள்!

4 weeks ago 6

நிலத்தடியில் எஞ்சியுள்ள ஈரத்தன்மையைப் பயன்படுத்தி வறட்சியினைத் தாங்கி வளரக்கூடிய தன்மை கொண்ட ஒரு அற்புதமான பயிர் எள்பயிர். இது கலப்புப் பயிருக்கும், தனிப்பயிருக்கும் ஏற்றதாக விளங்குகிறது. இதனுடைய வேரானது மண் அமைப்பினை மாற்றம் செய்வதனால் நீர்ப்பிடிப்புத் தன்மையை அதிகரிக்கிறது. ஒரு கிலோ எள் ரூ. 90 முதல் 150 வரை வகைகளுக்கு ஏற்றாற் போல் விற்பனை செய்யப்படுகிறது. மரச்செக்கின் மூலம் ஆட்டினால் 1 லிட்டர் நல்லெண்ணெய் கிடைக்க 2 கிலோ வரை எள் விதைகள் தேவைப்படும். தற்போது தொழில்முனைவோர்கள் மரச்செக்கின் மூலம் எண்ணெய் ஆட்டி விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. இது கால் நடைகளுக்கு சிறந்த தீவனமாகவும் பயன்படுகிறது. இத்தகைய சிறப்புகள் மிகுந்த எள் பயிரை நேர்த்தியான முறையில் சாகுபடி செய்து அதிக மகசூல் எடுக்க சில தொழில்நுட்ப தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார் கோயம்புத்தூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சு.வெங்கடாசலம்.

மாசிப் பட்டம், ஆடிப்பட்டம், புரட்டாசிப் பட்டம் மற்றும் மார்கழிப் பட்டங்கள் எள் சாகுபடிக்கு மிகவும் உகந்தவை. ஒரு எக்டருக்கு 5 கிலோ விதை போதும். விதைக்கும் முன் அசோஸ்பைரில்லம் 100 மில்லி மற்றும் பாஸ்போபாக்டீரியா 100 மில்லியுடன் நன்கு கலந்து நிழலில் உலர்த்தி பின் விதைக்கலாம். ரசாயன முறையில் 1 கிலோ விதைக்கு கார்பன்டாசிம் 2 கிராம் கலந்து பின் விதைக்கலாம்.விதைகளை வரிசை முறையில் விதைத்து செடிக்கு செடி 30 செ.மீ, வரப்புக்கு வரப்புக்கு 30 செ.மீ என்ற இடைவெளியில், ஒரு சதுர மீட்டருக்கு 11 செடிகள் என்ற எண்ணிக்கையில் இருக்குமாறு அமைக்க வேண்டும். விதைத்த 15 நாட்களுக்குள் குறைந்த எண்ணிக்கையில் முளைத்த பயிர்களுக்கு இடைவெளி நிரப்புதல் அவசியம்.விதைக்கும் முன் நிலத்தினை 3 முதல் 4 முறை நன்கு உழுது கடைசி உழவின்போது மக்கிய தொழு எரு அல்லது மண்புழு உரம் இட வேண்டும். விதையினை வரிசை முறையில் விதைக்கலாம் அல்லது 5 கிலோ விதையினை 20 கிலோ மணலுடன் கலந்து சீராகவும் விதைக்கலாம். விதைத்த 25 நாட்களுக்குப் பின் கைகளைக் கொண்டு களை நிர்வாகம் செய்ய வேண்டும் அல்லது பெண்டிமெத்தலின் 1 லிட்டர் மருந்தினை 200 லிட்டர் நீரில் கலந்து மண்ணில் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.

மண் பரிசோதனை பரிந்துரையின்படி உரமிட வேண்டும். அல்லது இறவைக்கு 1 ஏக்கருக்கு 14:9:9 கிலோ தழைச்சத்து (யூரியா 30 கிலோ), மணிச்சத்து (சூப்பர் பாஸ்பேட் 60 கிலோ) மற்றும் சாம்பல் சத்து (8 கிலோ) என்ற அளவில் உரமிட வேண்டும். இறவை மற்றும் மானாவாரி பயிருக்கு முழு அளவு தழை, மணி, சாம்பல் சத்து உரங்களை அடி உரமாக இட வேண்டும். எக்டருக்கு அசோஸ்பைரில்லம் 500 மில்லி மற்றும் பாஸ்போபேக்டீரியா 500 மில்லி உயிர் உரங்களை அடியுரமாக இடலாம். இதனால் கால்பங்கு தழைச்சத்து அளிப்பதை குறைத்துக் கொள்ளலாம்.ஏக்கருக்கு 5 கிலோ மாங்கனீசு சல்பேட்டை 20 கிலோ மணலுடன் கலந்து நிலத்தில் தூவுவதன் மூலம் மாங்கனீசு பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யலாம். ஒரு எக்டருக்கு 12.5 கிலோ தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை வழங்கும் எண்ணெய் வித்து நுண்ணூட்டக் கலவையினை செறிவூட்டப்பட்ட தொழுஉரமாக மானாவாரி பயிருக்கும் அடியுரமாக இடுவதன் மூலம் பெரும்பாலான நுண்ணூட்டச் சத்துக்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யலாம். எள் பயிரில் பூப்பிடிக்காமை பிரச்னையை நிவர்த்தி செய்ய விதைத்த 40ம் நாள் ஏக்கருக்கு 150 மி.லி பிளானோபிக்ஸ் 40 பி.பி.எம். மற்றும் 1 சதம் டி.ஏ.பி கரைசலைக் கலந்து மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும். எள் விதைத்த 30ம் நாள் மற்றும் 50ம் நாள் ஏக்கருக்கு 20 கிராம் சாலிசிலிக் அமிலத்தை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிப்பதன் மூலம் 20 சதம் மகசூலை அதிகரிக்கலாம்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு தளிர் பிணைக்கும் புழுக்கள் மற்றும் எள் காய் ஈயினைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 400 மி.லி குயினால்பாஸ் 25 இ.சி மருந்தினை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம். அல்லது 2 சதம் வேப்ப எண்ணெய்க் கரைசலையோ, 0.03 சதம் வேம்பு சார்ந்த மருந்துகளையோ இருமுறை பூக்கும் தருணத்திற்கு முன்பு தெளிக்க வேண்டும். எள் காய் துளைப்பான், காய் நாவாய் பூச்சியினை ஏக்கருக்கு 200 மி.லி இமிடாகுளோப்ரிட் 17.8 எஸ்எல் 250 மி.லி மருந்தினைத் தெளித்து கட்டுப் படுத்தலாம். வேரழுகல் நோயினைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 1 கிலோ சூடோமோனாஸ் (அ) டிரைக்கோடெர்மா எதிர் உயிரி பூஞ்சாணக்கொல்லி மருந்தை 20 கிலோ மணலுடன் கலந்து விதைத்த 30ம் நாள் மண்ணில் இடலாம். இலைப்புள்ளி நோய்களை ஏக்கருக்கு 400 கிராம் என்ற அளவில் மேங்கோசெப் மருந்தினைத் தெளித்து கட்டுப்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையங்களையோ அல்லது உழவர் செயலியின் மூலமும் தெளிந்துகொள்ளலாம்.

The post எள் சாகுபடிக்கு சில பயனுள்ள தகவல்கள்! appeared first on Dinakaran.

Read Entire Article