சென்னை: எல்லையில் போர் பதற்றம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது. விமான நிலைய பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், விமான பாதுகாப்பு படை பிரிவினர், போலீசார் விடுமுறைகள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா -பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் போர் பதற்றம் நிலவுவதால் நாடு முழுவதும் வான்வெளி போக்குவரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய அரசு அமல்படுத்தி உள்ளது. அதோடு எல்லைப் பகுதிகளில் உள்ள விமான நிலையங்கள், தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இதையடுத்து சென்னை விமான நிலையத்திலும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதோடு எந்த விமானங்கள் இயக்கப்படுகின்றன என்பதை பயணிகள் தங்கள் பயணிக்க வேண்டிய விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தெரிந்த பின்பு அதற்கு ஏற்றார் போல் பயண திட்டத்தை அமைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. விமான பயணிகளையும், அவர்கள் உடைமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் துருவித்துருவி சோதனை நடத்துகின்றனர்.
இதற்காக பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனைகள் நடக்கும் பகுதிகளில் கூடுதலாக பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதோடு சென்னை விமான நிலையத்தில் பணியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், போலீசார் மற்றும் விமான பாதுகாப்பு பிரிவான பி சி ஏ எஸ் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் விடுமுறைகள் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுமுறையில் இருப்பவர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு, உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பணியில் இருப்பவர்கள் உடல்நலம் பாதிப்பு, துக்க நிகழ்வு போன்றவைகளுக்கு ஒருநாள் மட்டும் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு சோதனைகள் நடக்கும் பகுதிகளில் பயணிகளின் காலணிகள் குறிப்பாக ஷூக்கள், பெல்ட்டுகள் போன்றவைகள் கழற்றப்பட்டு, ஸ்கேன் மூலம் பரிசோதிக்கப்படுகிறது. அதோடு திரவ பொருட்கள், பவுடர் போன்றவைகள் பயணிகள் எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாஸ்போர்ட்டுகள், அடையாள அட்டைகள் போன்றவை கவனமாக பரிசோதிக்கப்பட்டு, போலி ஆவணங்கள் மூலம் யாரும் பயணிக்க முடியாதபடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சென்னை விமான நிலையத்தை பொறுத்தமட்டில் பார்வையாளர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே அனுமதி இல்லாமல் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அதே நிலை தொடர்கிறது. இதற்கிடையே சென்னை விமான நிலையத்தில், பயணிகளை வழியனுப்ப அல்லது வரவேற்க செல்பவர்களுக்கு பணியில் இருக்கும் விமான நிலைய மேலாளர்கள், தற்காலிக பாஸ்கள் வழங்கும் முறை செயல்பாட்டில் இருந்து வந்தது. ஆனால், இப்போது பாதுகாப்பு காரணங்களுக்காக, விமான நிலைய மேலாளர்கள் தற்காலிக பாஸ்கள் வழங்கும் முறை நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது.
சென்னை விமான நிலையத்திற்குள் மிகவும் அவசியமாக செல்ல வேண்டியவர்கள், அதற்கான முறையான ஆவணங்களை விமான நிலைய வளாகத்தில் உள்ள பி சி ஏ எஸ் எனப்படும் பீரோ ஆப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி அலுவலகத்தில் கொடுத்து, தனியாக பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பாஸ்கள் அனைவருக்கும் கிடைக்காது.
சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனைகள் நடக்கும் இடங்கள், விமானங்களில் பார்சல்களை ஏற்றும் இடங்கள், விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடங்கள், கார் பார்க்கிங் பகுதி உள்ளிட்ட இடங்களில், கூடுதல் பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலைய வளாகம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர கண்காணிப்புகளில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகத்துக்கிடமான நபர்களின் நடமாட்டங்கள் ஏதாவது இருக்கிறதா என்றும் தீவிர கண்காணிப்புகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
The post எல்லையில் போர் பதற்றம் காரணமாக சென்னை ஏர்போர்ட், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு: விடுமுறையில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் போலீசார் உடனே பணிக்கு திரும்ப உத்தரவு appeared first on Dinakaran.