
அகமதாபாத்,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 51-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 224 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 76 ரன்களும், பட்லர் 64 ரன்களும், சாய் சுதர்சன் 48 ரன்களும் அடித்தனர். ஐதராபாத் தரப்பில் உனத்கட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.பின்னர் 225 ரன் இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 186 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் குஜராத் 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் அபிஷேக் சர்மா 74 ரன்கள் அடித்தார். குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் சிராஜ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்த நிலையில், எல்லா நேரமும் 200 ரன்களுக்கு மேல் எடுக்க முடியாது என ஐதராபாத் பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது ,
கடந்த ஆண்டு, நாங்கள் 4 அல்லது 5 போட்டிகளில் 200+ ரன்கள் எடுத்தோம், அது நாங்கள் ஒரு தரத்தை நிர்ணயித்துள்ளோம் என்ற உணர்வை எங்களுக்கு அளித்தது. ஆனால் அது எப்போதும் வழக்கமாக இருக்க முடியாது. மற்ற அணிகளும் பேட்ஸ்மேன்களும் இப்போது சிறப்பாக திட்டமிடுகிறார்கள், மேலும் பந்து வீச்சாளர்களும் புதிய உத்திகளைக் கொண்டு வருகிறார்கள்.
"கடந்த சில போட்டிகளில் சராசரி ஸ்கோர்கள் ஒட்டுமொத்தமாக உயர்ந்துள்ளன என்றும் நான் உணர்கிறேன். கடந்த ஆண்டு எங்களிடம் குறிப்பாக வலுவான பேட்டிங் இருந்தது, இது அந்த அதிக ஸ்கோர்களுக்கு வழிவகுத்தது. ஆனால் இறுதியில், பெரிய ஸ்கோர்களை அடிப்பதை விட ஆட்டங்களில் வெற்றி பெறுவது மிக முக்கியம். என தெரிவித்துள்ளார் .