'எல்2 எம்புரான்' - அமலாக்கத்துறை சோதனை நிறைவு

7 hours ago 2

சென்னை,

மோகன்லால் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'லூசிபர்' படத்தின் 2-ம் பாகமாக உருவான 'எல் 2 எம்புரான்' கடந்த 27-ம் தேதி வெளியானது. மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிவேகமாக ரூ. 100 கோடி வசூல் செய்த மலையாள படம் என்ற புதிய சாதனையை 'எல் 2 எம்புரான்' படைத்திருக்கிறது. இதுவரை ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இந்த படத்தில் ஒரு சில சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்ட நிலையில் படக்குழு அதற்காக 17 இடங்களில் காட்சிகள் நீக்கி மொத்தமாக 3 நிமிட காட்சிகளை படத்தில் இருந்து எடுத்தனர். நடிகர் மோகன்லாலும் இதற்கு வருத்தம் தெரிவித்து தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எம்புரான் பட தயாரிப்பாளருக்கு சொந்தமான கோகுலம் சிட்பண்ட், நீலாங்கரை இல்லத்தில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை, கோடம்பாக்கம் அலுவலகம், நீலாங்கரை இல்லத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவுபெற்றிருக்கிறது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Read Entire Article