
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'லூசிபர்'. இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி இருக்கிறது. இந்த படத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
சமீபத்தில் இப்படத்தில் நடித்துள்ள முக்கியமான 36 கதாபாத்திரங்களின் அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அதில் டோவினோ தாமஸ் 'ஜதின் ராமதாஸ்' என்ற கதாபாத்திரத்திலும், பிருத்விராஜ் 'சையத் மசூத்' என்ற கதாபாத்திரத்திலும், மோகன்லால் 'குரேஷி ஆபிராம் ஏ.கே. ஸ்டீபன் நெடும்பள்ளி' என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் பான் இந்திய அளவில் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது.
சமீபத்தில் கிடைத்த தகவலின் படி இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியானது. அதாவது லைக்கா நிறுவனத்திற்கும், ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்திற்கும் இடையில் கருத்து வேறுபாடு இருக்கும் காரணத்தால் லைக்கா நிறுவனம், எம்புரான் படம் வெளியாவதற்கு முன்பாகவே தங்கள் முதலீடு செய்த தொகையை வட்டியுடன் திருப்பித் தருமாறு ஆசிர்வாத் நிறுவனத்திடம் கேட்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் "எல் 2 எம்புரான்" படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு போஸ்டர் வெளியிட்டு உறுதி செய்துள்ளது. "'எல் 2 எம்புரான்' படத்தை கோகுலம் மூவீஸ் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். 'லூசிபர்' படத்தின் 2வது பாகமான 'எல் 2 எம்புரான்' மார்ச் 27ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது" என்று தனது எக்ஸ் தளத்தில் படக்குழு அறிவித்துள்ளது.