புதுச்சேரி, ஜன. 19: புதுச்சேரியை சேர்ந்த பெண் விஞ்ஞானி ஒருவர் எலுமிச்சை நறுமணம் மிக்க மிளகை கண்டுபிடித்துள்ளார். புதுச்சேரி, கூடப்பாக்கத்தை சேர்ந்தவர் வெங்கடபதி. இவர் ஆராய்ச்சியின் மூலம் கனகாம்பரம் பூவில் பல நூறு வகையான செடிகளை உருவாக்கி சாதனை படைத்தவர். இந்திய அரசு, இவருக்கு பத்ம விருது வழங்கி கவுரவித்துள்ளது. இவரது மகள் ரீலட்சுமி (32) எம்.பி.ஏ பட்டதாரியான இவர் தந்தையுடன் சேர்ந்து விவசாயத்தில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே ஆரஞ்சு, சாக்லெட், நாவல், பன்னீர் சுவை கொண்ட கொய்யா செடிகளை உருவாக்கி உள்ளார். தற்போது லெமன் சுவையில் நறுமண மிளகை புதிதாக உருவாக்கி அசத்தியுள்ளார்.
சுமார் 15 அடி உயரத்தில் விளைச்சல் தரக்கூடிய புதிய மிளகு இனம் மூலம் காய்கள், இலைகளை சுவைத்தால் லெமன் நறுமணம் தரும். மேலும் காரமும் சாதாரண மிளகு இனத்தை காட்டிலும் சற்று தூக்கலாக உள்ளது. சூரிய கதிர்வீச்சினால் சடுதிமாற்றம் (மியூட்டேஷன்) செய்யப்பட்டு இந்த புதிய ரக மிளகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிய கண்டுபிடிப்பான எலுமிச்சை நறுமணம் வீசும் மிளகு செடியை சட்டப்பேரவை வளாகத்தில் சபாநாயகர் செல்வத்திடம் காண்பித்து லட்சுமி வாழ்த்து பெற்றார். அப்போது நறுமணம் தரும் மிளகினை சாப்பிட்டு பார்த்த சபாநாயகர் பெண் விஞ்ஞானி லட்சுமியை பாராட்டினார்.
The post எலுமிச்சை நறுமணம் வீசும் மிளகு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.