
அறுபத்து மூன்று நாயன்மார்களில் எறிபத்த நாயனாரும், புகழ்சோழ நாயனாரும் வாழ்ந்து சிவபதம் பெற்ற பெரும் புண்ணிய பூமி கரூர். இங்குள்ள பசுபதீஸ்வரரை, சிவகாமி ஆண்டார் எனும் முனிவர் அனுதினமும் பூக்கள் தூவி வழிபட்டு வந்தார். சிவ வழிபாட்டுக்குத் தேவையானப் பூக்களைத் தினமும் தாமே, அருகிலுள்ள நந்தவனத்தில் பறித்து, ஒரு பூக்குடலையில் (பூக்கூடையில்) இட்டு, பின்பு ஆலயம் வந்து பசுபதீஸ்வரரை பூக்களை தூவி வழிபடுவார்.
ஒருநாள் சிவகாமி ஆண்டார் பூக்களைப் பறித்து, பூக்கூடையில் இட்டு ஆலயம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்து கொண்டிருந்த, கரூரை ஆண்ட புகழ்ச்சோழனின் பட்டத்து யானை, பூக்கூடையை தட்டி விட்டு பூக்களைச் சிதறச் செய்து விட்டது. சிவ பூஜைக்குரிய பூக்கள் சிதறி விட்டதை எண்ணி மனம் கலங்கி நின்றார் சிவகாமி ஆண்டார்.
எறிபத்த நாயனார்
அப்போது அவ்வழியே வந்த எறிபத்தர் எனும் சிவபக்தர், இதனைக் கண்டு கோபமுற்று தன் கையில் இருந்த கோடரியால் பட்டத்து யானையை துணித்தார். மேலும் யானையின் இச்செயலை தடுக்காத பாகன்கள் இருவரையும், படைவீரர்கள் மூவரையும் தன் கோடரியால் வெட்டி வீழ்த்தினார்.
இதையறிந்த மன்னன் புகழ்ச்சோழன் சம்பவ இடத்திற்கு ஓடோடி வந்தான். அங்கே கண்களில் கோபம் கொப்பளிக்க கோடரியுடன் சிவனடியார் ஒருவர் நிற்பதைக் கண்டு, 'இந்த சிவனடியாரா யானையைக் கொன்று, பாகன்களையும், வீரர்களையும் கொன்றிருப்பார்?' எனக் கலங்கிய கண்களுடன் எறிபத்தரைப் பார்க்க, நடந்தவற்றை சுருக்கமாக கூறி முடித்தார், அருகில் இருந்த சிவகாமி ஆண்டார்.
மன்னனின் சிவபக்தி
'சிவ பக்தருக்கு இடையூறு செய்த இந்த யானைக்குச் சொந்தக்காரன் நான் அல்லவா? எனவே இதோ என்னுடைய வாளால், என் தலையை துண்டியுங்கள்' என்று கூறி எறிபத்தரிடம் தனது வாளை நீட்டினான் மன்னன். அவனது பக்தி நெறியை உணர்ந்து நெகிழ்ந்து போன எறிபத்தர், மன்னன் நீட்டிய வாளைப் பெற்று, 'இவ்வளவு நேர்மை கொண்ட மன்னனுக்கு முன்னால் நான் சாதாரணமானவன் என்று எண்ணி, அந்த வாளால் தன்னைத் தானே மாய்த்துக் கொள்ள முனைந்தார் எறிபத்தர். இதைக் கண்ட புகழ்ச்சோழன் பதறிப்போனான்.
அப்போது வானில் இருந்து ஒரு அசரீரி ஒலித்தது. 'உங்கள் இருவரின் சிவ பக்தியை உலகறியச் செய்யவே இந்த திருவிளையாடலை நடத்தினோம்' என்று அந்த குரல் கூறியது. உடனே எறிபத்தர் மன்னனைப் பணிந்து வணங்கினார். மன்னன் எறிபத்தரின் பாதத்தைப் பற்றிக் கொண்டான். ஒருவரையொருவர் ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் சிந்தினர்.
இந்த நிலையில் சிதறிக் கிடந்த பூக்கள், பூக்கூடையை அடைந்து சிவகாமி ஆண்டார் கைக்குச் சென்றது. உறங்கி விழித்தது போல் யானையும், பாகன்களும், வீரர்களும் உயிர் பெற்று எழுந்தனர். இதனைக் கண்டவர் யாவரும் வியந்தனர். அங்கு ஈசனும், அம்பாளும் தோன்றி அனைவருக்கும் ஆசி வழங்கினர்.
இவ்வாலயத்தின் சன்னிதி வீதிக்கு கிழக்கில், நான்கு வீதிகள் கூடுமிடத்தில் தான், எறிபத்த நாயனார் பட்டத்து யானையை துணித்த (வெட்டிய) வரலாறு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இன்றும் நவராத்திரி அஷ்டமி நாளில் இந்த ஆலயத்தில், 'எறிபத்த நாயனார் பட்டத்து யானையை வெட்டி வீழ்த்திய நிகழ்வு' சிறப்பாக ஐதீக விழாவாக நடத்தப்படுகிறது.
பூக்குடலை
இந்த பூக்குடலை நிகழ்ச்சியின்போது, வில்வம் சமர்ப்பித்தால் நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும் கிட்டும். முல்லைப் பூ சமர்ப்பித்தால் உடற்பிணிகள் அகன்று நல் ஆரோக்கியம் கிட்டும். மல்லிகைப் பூ சமர்ப்பித்தால் சிறந்த கல்வியும், நல்ல வேலைவாய்ப்பும் உண்டாகும். அரளிப்பூ சமர்ப்பித்தால் திருமணத் தடைகள் அகன்று நல்ல வரன்கள் தேடி வரும். மரிக்கொழுந்து சமர்ப்பித்தால் மகிழ்ச்சியான வாழ்வுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் யாவும் கிடைக்கும். செம்பருத்திப் பூ சமர்ப்பித்தால் ரத்த சம்பந்தமான நோய்கள் குணமாகும். செண்பகப்பூ சமர்ப்பித்தால் தவறாமல் புத்திரபாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.