
தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்டக்கூறுகளை நிறைவேற்றுவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதி ரூ.2,152 கோடியும் மத்திய அரசு விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
இதனிடையே, புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காவிட்டால் கல்வி நிதி கிடையாது என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு எற்காத பட்சத்தில் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி 2 ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை என்று அவர் கூறினார். மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானின் கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், 'எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல' என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
வாழ்ந்தவர்கள் என்பதை நினைவூட்ட வரலாறு இருக்க,எதற்காக வடவரிடம் பிடரியைக் கொடுத்துவிட்டுப் பிறகு மெள்ள மெள்ள வலிக்கிறது வலிக்கிறது என்று வேதனைக் குரலொலித்துக் கிடக்க வேண்டும்?
மாதாவுக்கு மத்தாப்பு வண்ணச் சேலையா கேட்கிறோம்?
அன்னையின் ஆடையை, அக்கிரமக்காரனே பிடித்திழுக்கத் துணிகிறாயே, ஆகுமா இந்த அக்கிரமம் என்றல்லவா கேட்கிறோம்.
உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல,
இழந்ததைக் கேட்கிறோம்; இரவல் பொருளல்ல.
எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல.
" இந்த மூலக்கருத்தை உணரா முன்னம் வடவரின் கொட்டம் அடக்கப்படுவது முடியாத காரியமாகும். "
-பேரறிஞர் அண்ணா
என பதிவிட்டுள்ளார்.