சென்னை: “எம்எல்ஏ-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் பணிகளின் மீது விதிக்கப்படும் 18 சதவீத வரித் தொகையை இந்த நிதியிலிருந்தே கட்டப்படுவதால், தொகுதி நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே, 18 சதவீத வரித் தொகையை தமிழக அரசே ஏற்கும்,” என்று பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் இன்று (ஏப்.26) சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசியது: “இங்கு காங்கிரஸ் உறுப்பினர் சந்திரசேகர் உரையாற்றுகிபோது, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி உயர்வைப் பற்றிப் பேசியிருக்கிறார். அவர் மட்டுமல்ல, பலரும் இதுகுறித்து என்னிடத்தில் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். மனுக்கள் மூலமாகவும் என்னிடத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.