எமர்ஜிங் டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன்

2 weeks ago 4

அல் அமீரத்: 2024 எமர்ஜிங் அணிகள் ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை ஆப்கானிஸ்தான் ஏ அணி வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. இரண்டு முறை எமர்ஜிங் ஆசியக் கோப்பை வென்று இருந்த இலங்கை ஏ அணி இந்த முறையும் கோப்பை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஆப்கானிஸ்தான் ஏ அணி சிறப்பாக ஆடி கோப்பையை வென்றது. இதன் மூலம், முதன்முறையாக ஆப்கானிஸ்தான் ஏ அணி எமர்ஜிங் ஆசிய கோப்பையை வென்றது.

நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இலங்கை ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இலங்கை ஏ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் சேர்ந்து மொத்தமாக 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தனர். அதன் பின் பவன் ரதநாயகே 20 ரன்களும், சஹான் அராச்சிகே 64 ரன்களும், நிமேஷ் விமுக்தி 23 ரன்களும் சேர்த்தனர். ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் காசன்ஃபார் 2 விக்கெட், பிலால் சமி 3 விக்கெட்களும் வீழ்த்தினர். இதையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் ஏ அணியின் துவக்க வீரர் ஜுபாயித் அக்பரி முதல் ஓவரின் முதல் பந்தில் டக் அவுட் ஆனார். பின்னர் கேப்டன் டர்விஷ் ரசூலி மற்றும் செடிகுல்லா அடல் இணைந்து ரன் சேர்த்தனர்.

டர்விஷ் ரசூலி 24 ரன்கள் எடுத்து அவுட்டானார். அபாரமாக ஆடிய செடிகுல்லா கடைசி வரை களத்தில் இருந்தார். அவர் 55 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். கரீம் ஜன்னத் 27 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தும், முகமது இஷாக் 6 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தும் அவருக்கு ஒத்துழைப்பு அளித்தனர். ஆப்கானிஸ்தான் ஏ அணி 18.1 ஓவரில் 134 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்த இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை வீழ்த்தி வெற்றி பெற்று எமர்ஜிங் ஆசிய கோப்பையை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.

The post எமர்ஜிங் டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன் appeared first on Dinakaran.

Read Entire Article