என்னால் எதுவும் முடியும்!

3 hours ago 3

முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் தான் ஒருவரை முழுமையாக இயங்க வைக்கின்றது.அதன் காரணமாக வெற்றியின் திசை நோக்கி முயற்சி சிறகுகளை அசைத்துக் கொண்டே இருக்க வேண்டும். சாதனை முயற்சிகள் ஒன்றும் சாதாரணமானவை அல்ல. உங்கள் தோட்டத்துச் செடியில் பூவை பறிப்பது போல அதை எளிதாய் செய்து விட முடியாது. நாம் அறிந்திராத ஒன்று முன்பு சென்றிடாத ஒரு பாதையில் செல்வது முன்பு செய்திடாத தொழில் முயற்சியும் மேற்கொள்வது, சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றை செய்ய முனைவது இவை எல்லாம் ‘ரிஸ்க்’ என்கின்றோம்.ரிஸ்க் எடுக்கிறவர்கள் கயிறு கட்டி மலையை இழுப்பவர்கள் வந்தால் மலை அறுந்தால் கயிறு என்று எண்ணிக் கொள்வார்கள். ஒன்றை இழந்து தானே ஒன்றை பெற வேண்டி இருக்கும். அதுவே அவர்களுடைய கோட்பாடு, அவர்கள் தோல்விகளையும், தவறுகளையும் கற்பதற்கான வாய்ப்பு களாகக் கருதுகிறார்கள்.

நீங்கள் ரிஸ்க் எடுக்கிறபோது உங்கள் அறிவுக்கும் அப்பாற்பட்ட ஒரு வெளியில் பயணம் தொடங்குகிறது. உங்களைப் பற்றியும், உங்கள் சூழ்நிலைகள் பற்றியும் கொஞ்சம் கூடுதலாக தெரிந்து கொள்வீர்கள்.ரிஸ்க் எடுப்பது சிலருக்கு மகிழ்ச்சி அளிப்பதாய் இருக்கும். நேர்த்தியாக உணர்வார்கள். வாழ்க்கை ஒன்று சாகசங்கள் நிரம்பியதாகவோ அல்லது சாரமற்றதாகவோ இருக்கிறது என்பார் ஹெலன் கெல்லர். ஜார்ஜ் மல்லாரி என்பவர் சாகசங்களில் நாட்டம் கொண்டவர். அவரிடம் நீங்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற விரும்புவது ஏன்? என்று கேட்டார்கள். ஏனென்றால் அது அங்கே தொலைவில் இருக்கே என்று பதில் வந்தது. நாம் குழந்தையாக இருந்து நடக்கக் கற்றுக் கொண்டபோது ரிஸ்க் எடுக்க தொடங்கி விட்டோம். ஆனால் வளர்ந்த பிறகு பாதுகாப்பான சூழ்நிலைமட்டுமே தேடுகின்றோம்.

எஸ்கிமோக்கல் பயன்படுத்தும் சிறிய பனிப் படகினைக் கொண்டு நைல் நதியில் 2000 மைல் பயணம் செய்தார் டேவிட் மிலன் ஸ்மித் என்பவர். சஹாரா பாலைவனத்தில் ஒரு நீண்ட தூர ஓட்டத்தையும் இவர் ஓடி இருக்கிறார். ஜிப்ரால்டர் ஜலசந்தியில் ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு நீந்திய முதல் நபர் இவர்தான். நீரோட்டத்திற்கு எதிராக நீந்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. என்னால் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை. மற்றவர்களுக்கு முடியாததை எல்லாம் நான் செய்திருக்கிறேன்! என்கிறார் அவர். இவர்களின் வரிசையில் இந்த சாதனை பெண்மணியும் சேர்த்துக் கொள்ளலாம்.மாயா ஜால வித்தை என்பது அனைவரையும் கவரக்கூடிய ஒன்று. பெரும்பாலும் மாயாஜால நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் ஆண்களாக இருப்பதை நாம் பார்த்திருக்கலாம். ஆனால் இந்த துறையில் ஈடுபட்டு கடந்த 20 ஆண்டுகளாக சாதனை புரிந்து வருகிறார் ஒரு பெண்.இந்தியாவின் முதல் பெண் மாயாஜால நிபுணர் என்ற சிறப்பை பெற்றிருக்கும் சுஹானி ஷா.

இவரது முதல் மேடை நிகழ்ச்சி அகமதாபாத்தில் இருக்கும் தோகோர் பாய் தேசாய் அரங்கில் நடைபெற்றது. அப்போது இவருக்கு வயது ஏழு மட்டுமே! அந்த சமயத்தில் தமக்கு துளி கூட மேடைக்கு உரித்தான அச்சம் இல்லை என்று சொல்கின்றார் சுஹானி ஷா.உலகிலேயே மிக இளவயது மாயாஜால நிபுணர் என்று இவரது பெயர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்று இருக்கிறது.பல விருதுகளையும் இவர் பெற்றிருக்கிறார்.இதுவரை 5000க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார். சுஹானி ஷா ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் உதய்பூரில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர்.இவரது தந்தை பிட்னஸ் ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர். தாயார் குடும்பத் தலைவி. சுஹானிக்கு ஒரு சகோதரரும் இருக்கிறார்.

தம்மை தந்திரங்கள் செய்பவர் என அழைப்பதைவிட மந்திரவாதி என்று அழைப்பதையே பெரிதும் விரும்புவதாக சுஹானி சொல்கிறார். இளம் வயதில் பலரும் தேர்ந்தெடுக்க விரும்பும் துறைகளான பொறியியல், மருத்துவம் போன்ற எதுவும் சுஹானி ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை .வழக்கத்துக்கு மாறானதும், தனித்துவம் நிரம்பியதாகவும், சவால்கள் உடையதாக இருக்கும் மாயாஜாலத்தை ஏன் தனது தொழிலாக இவர் தேர்ந்தெடுத்து இருக்கிறார்? ஏனென்றால் மற்ற அனைவரும் பிற துறைகள் அனைத்தையும் தேர்வு செய்வதால், நான் இதைத் தேர்ந்தெடுத்தேன் என்கிறார் சுஹானி. நான்கு அல்லது ஐந்து வயது இருக்கும்போது மாயாஜால நிகழ்ச்சி ஒன்றை பார்த்திருக்கின்றார். அது அவருக்கு மிகவும் பரவசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மறுபடி, மறுபடி அதுபோல நிகழ்ச்சிகளை பார்க்கும்போது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஆர்வத்தை விட தானே அப்படி ஒரு நிகழ்ச்சியைச் செய்து காண்பிக்கும் ஆர்வம் அவருக்கு மேலோங்கியது. பெற்றோரிடம் தனது விருப்பத்தைச் சொல்லி உள்ளார். அவர்களும் சம்மதித்தனர். இப்படித்தான் மாயாஜால துறையில் கால் பதித்து சாதித்து வருகிறார் சுஹானி.

சுஹானி பத்தாவது வயதிலேயே கணிப்பொறியியலில் பட்டயப்படிப்பை முடித்திருக்கிறார். மாநில அளவிலான நீச்சல் போட்டிகளிலும் பங்கு பெற்றிருக்கின்றார். மாயாஜாலம் என்பது வெறும் கயிற்றை கொண்டும், சீட்டுக்களைக் கொண்டும் செய்யும் வித்தை மட்டுமல்ல, எப்படி நடனத்தில் பல வகைகள் இருக்கின்றனவோ அதேபோல மாயாஜாலத்திலும் மென்டலிஸம், எஸ்கேபிஸம், இல்யூஷன், க்ளோஸ் அப், பிளைண்ட்போல்ட், ஸ்ட்ரீட், காஞ்சூரிங் எனப் பல பிரிவுகள் இருக்கின்றன என்கிறார் சுஹானி. அவரிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தால் உங்கள் மனதுக்குப் பிடித்தவரின் பெயரை அவரால் சொல்ல முடியும்! இணையத்தில் அவரது காணொளி வைரலாகப் பரவுகிறது. மனோதத்துவ நிபுணர், பெரும் நிறுவனப் பணியாளர்களுக்குப் பயிற்சியாளர், எழுத்தாளர், ஆலோசகர் எனப் பல முகங்கள் சுஹானிக்கு இருக்கின்றது.உளவியலும்,மாயாஜாலமும் எப்படி ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து இருக்கின்றன என்பதை பற்றி பல காணொளிகளிலும் பேசி வருகிறார்.சமூக வலைதளத்தில் இவரை லட்சக்கணக்கான பேர் பின் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாயாஜாலம் மக்களை நன்கு புரிந்து கொள்ள எனக்கு உதவுகிறது. அதன் மூலம் அவர்களது பிரச்னைகளைத் தீர்க்கவும், உத்வேகமூட்டவும் எனக்கு பாதை கிடைக்கிறது என்பது சுஹானியின் கருத்து. சுஹானி மனநல ஆலோசனை மையமும் நடத்துகிறார். பலருக்கும் ஆலோசனைகள் சொல்வதும் மனதளவுக்கான சிகிச்சைகள் அளிப்பதும் இவரது லட்சியமாகத் திகழ்கின்றன. தன்னுடைய ஆர்வத்தை இலக்காக மாற்றிக் கொண்டு விசித்திரமான துறையில் நுழைந்து சாதித்துக் கொண்டிருக்க கூடியவர் தான் சுஹானி. ‘என்னால் எதுவும் முடியும்’ என்ற நம்பிக்கையில் தீராத ஆர்வத்துடன், நேர்மறை எண்ணத்துடன், கூடுதல் துணிவுடன் செயல்பட்டால் முடியாதது என்று எதுவுமே இல்லை என்பதுதான் இவருடைய வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.

The post என்னால் எதுவும் முடியும்! appeared first on Dinakaran.

Read Entire Article